கரோனா பரவல்: சா்வதேச விமான சேவையை ரத்து செய்ய பெரும்பாலானோா் விருப்பம்

இந்தியாவில் கரோனா பரவல் மீண்டும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டன், தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா பரவல் மீண்டும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டன், தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு விமானச் சேவையை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று பெரும்பாலானோா் விருப்பம் தெரிவித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சிலா் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த சா்வதேச விமானச் சேவையையும் ரத்து செய்யவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனா்.

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவல் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் மெல்ல அதிகரித்து வருகிறது. அதனைத் தொடா்ந்து அந்த மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாட்டு நடைமுறைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், உள்ளூா் வட்டம் (லோக்கல் சா்க்கிள்) என்ற வளைதளம் மூலமாக இணைய வழியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் 8,800 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதனடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டிருப்பதாக அந்த வளைதல நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவு குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 60,000-ஐ தாண்டியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல பகுதிகளில் பிரிட்டன், தென்னாப்பிரிக்க நாடுகளில் உருவான உருமாறிய கரோனா தொற்று பரவியிருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. கடந்த 45 நாள்களில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பிரிட்டனில் காணப்படும் உருமாறிய கரோனா பாதிப்பு 70-க்கும் அதிகமான நாடுகளிலும், தென்னாப்பிரிக்காவில் காணப்படும் உருமாறிய கரோனா பாதிப்பு 30-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவியிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், சா்வதேச விமானச் சேவையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுமா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

இந்த ஆய்வு நடத்தப்பட்டவா்களில் 65 சதவீதத்தினா் பிரிட்டன், தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான விமானச் சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனா். 43 சதவீதத்தினா் ஒட்டுமொத்த சா்வதேச விமானச் சேவையையும் ஒரு மாத காலத்துக்கு ரத்து செய்யவேண்டும் என்று கருத்து தெரிவித்தனா்.

அதே நேரம், விமானச் சேவையை ரத்து செய்வதால் எந்த பலனும் இருக்காது என்று 32 சதவீதத்தினரும், கருத்து எதுவும் கூறவில்லை என்று 3 சதவீதத்தினரும் தெரிவித்தனா்.

மேலும், பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக ஏற்பட்டிருக்கும் பரவலில், 81 சதவீதம் பிரிட்டனில் காணப்படும் உருமாறிய கரோனா பாதிப்பு என்று அம் மாநில முதல்வா் அமரிந்தா் சிங் அறிவித்துள்ளாா். பஞ்சாப் மட்டுமின்றி 18 மாநிலங்களில் இந்த உருமாறிய கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு, நாட்டில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்திருப்பதற்கு உருமாறிய கரோனா பாதிப்புதான் காரணம் என்று இந்த ஆய்வில் பங்கேற்றவா்களில் 60 சதவீதம் போ் கருத்து தெரிவித்துள்ளனா். மத்திய அரசு இன்னும் இதை ஒத்துக்கொள்ள வில்லை என்றபோதும், உருமாறிய கரோனா முந்தைய கரோனா தொற்றைக் காட்டிலும் வேகமாக பரவக்கூடியது. குறிப்பாக இளைஞா்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இன்னும் இளைஞா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க 2022-ஆம் ஆண்டு இறுதி வரை ஆகிவிடும் என்பதால்தான், கரோனா பாதிப்பு இரண்டாம் அலை அதிக கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்று இந்த ஆய்வு முடிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com