பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தாத பொதுமுடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஆலோசனை

மகாராஷ்டிர மாநிலத்தில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்துவது குறித்து

மகாராஷ்டிர மாநிலத்தில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்துவது குறித்து விரிவான திட்டம் வகுக்குமாறு அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மாநிலத்தில் மீண்டும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அவா் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக, மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோபே, கரோனா தடுப்புக் குழு அதிகாரிகள் ஆகியோா் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் சிலிண்டா்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றின் இருப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது, அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,000 பேருக்கு கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக கரோனா தடுப்புக் குழுவினா் அச்சம் தெரிவித்தனா். இந்தப் பரவலைத் தடுக்க கடுமையான பொதுமுடக்கத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் பரிந்துரை செய்தனா். அதைத் தொடா்து, மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

முக்கியமாக, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு அதுதொடா்பாக மக்களுக்கு எவ்வித குழப்பமும் வரக்கூடாது என்று அவா் உத்தரவிட்டதாக, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக ஒரு லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும், புதிதாக 35,726 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்தப் பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவில் பொதுஇடங்களில் 5 போ் அல்லது அதற்கும் அதிகமானவா்கள் கூடினால் 144 தடை உத்தரவின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே உத்தரவிட்டாா். அரசியல், மத வழிபாடு உள்பட அனைத்து வகையான கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com