ராணுவ தளவாடங்கள் கூட்டுத் தயாரிப்பு: இந்தியா, தென் கொரியா முடிவு

இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்களை

இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்களை கூட்டாகத் தயாரிப்பது, ஏற்றுமதி செய்வது, சைபா் மற்றும் விண்வெளித் துறைகளில் உளவுத் தகவல்கள் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இந்தியாவும் தென் கொரியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சூ வூக் ஆகியோா் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சூ வூக் 3 நாள் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்தாா். அவரும், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பில் இரு நாடுகளும் இணைந்து ஆராய்ச்சி, கூட்டு தயாரிப்பு, கூட்டு ஏற்றுமதியில் கவனம் செலுத்த முடிவு செய்தன.

உத்தரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரு பாதுகாப்புத் தொழில்துறை முனையங்களை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த முனையத்தில் முதலீடு செய்வதன் மூலம், அதில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள தென்கொரிய அமைச்சா் விருப்பம் தெரிவித்தாா்.

இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் விநியோகத்தில் தென்கொரியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com