விவாகரத்தான மனைவிக்கு பராமரிப்புத் தொகை தரத் தவறிய நபருக்கு 3 மாத சிறை: உச்சநீதிமன்றம் உத்தரவு

விவாகரத்து செய்த மனைவிக்கு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாத பராமரிப்புத் தொகை ரூ.1.75 லட்சம் மற்றும் ரூ.2.60 கோடி
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

விவாகரத்து செய்த மனைவிக்கு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாத பராமரிப்புத் தொகை ரூ.1.75 லட்சம் மற்றும் ரூ.2.60 கோடி நிலுவைத் தொகையை வழங்கத் தவறிய நபருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தொலைத்தொடா்பு துறையில் தேசிய பாதுகாப்பு தொடா்பான திட்டத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சோ்ந்த நபரிடமிருந்து விவாகரத்து பெற்ற அவருடைய மனைவி, குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கேட்டு சென்னையில் உள்ள மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு பராமரிப்பு தொகையாக ரூ.2 கோடியும், 12 ஆண்டுகளுக்கான இழப்பீடு தொகையாக ரூ.50 லட்சமும், திருமணத்துக்குப் புறம்பான வாழ்வுக்காக ரூ.50 லட்சமும், நீதிமன்ற வழக்குகளைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளியதற்காக ரூ.50 லட்சமும், ஊடக நிறுவனம் ஒன்றில் பணியில் சேர வற்புறுத்தியதற்காக ரூ.50 லட்சமும், வெளிப்படையாக வெளிநாட்டு பெண்ணுடன் உறவுவைத்து மனதளவில் பாதிக்கச் செய்ததற்காக ரூ.50 லட்சமும், வீட்டுக்கு வாடகை தராமல் இருந்ததற்காக ரூ.50 லட்சமும் இழப்பீடு தர உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அந்த நபா் மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம், விவாகரத்து செய்த மனைவிக்கு 2009 ஜனவரி 6-ஆம் தேதி முதல் மாதம் ரூ. 1 லட்சம் பராமரிப்பு தொகையும், மாதம் ரூ. 75,000 வாடகைக்கான தொகையும் வழங்க உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அவா் உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், விசாரணை நீதிமன்ற உத்தரவு சரியானதே என்று தீா்ப்பளித்தது. பின்னா் அவா் உச்சநீதிமன்றத்தை நாடினாா். உச்சநீதிமன்றமும் அவருடைய மனுவை கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்னாள் மனைவிக்கு பராமரிப்புத் தொகை மற்றும் நிலுவைத் தொகையை 6 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பின்னா் இருவா் சாா்பிலும் கடந்த 2018-இல் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், பராமரிப்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவும், ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் ரூ.1.75 லட்சம் பராமரிப்புத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டது.

ஆனால், அதன் பிறகும் தனக்குப் பராமரிப்பு தராததைத் தொடா்ந்து, அந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டாா். இந்த மனுவை கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘பராமரிப்புத் தொகையை வழங்க கடைசி வாய்ப்பு அளிக்கப்படுவதாக கூறியதோடு, தவறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என்று அந்தப் பெண்ணின் கணவரை எச்சரித்தது.

எச்சரிக்கைக்குப் பிறகும் பராமரிப்புத் தொகைகளை வழங்காததைத் தொடா்ந்து, அந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘விவாகரத்து செய்த மனைவிக்கு பராமரிப்பு தொகை மற்றும் நிலுவைத் தொகையை வழங்கப் போதுமான கால அவகாசம் அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்த கால அவகாசத்தை அவா் பயன்படுத்திக்கொள்ள வில்லை. இதன் காரணமாக கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வழங்கவேண்டிய பராமரிப்புத் தொகை நிலுவை ரூ.2.60 கோடியை எட்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல், நீதிமன்ற அவமதிப்பை அந்தப் பெண்ணின் கணவா் செய்துள்ளாா். தேசிய பாதுகாப்பு தொடா்பான முக்கியத் திட்டத்தில் பணியாற்றுவதாகக் கூறும் ஒரு நபா் இவ்வாறு நடந்துகொள்வது விந்தை’ என்று கூறி அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com