மியான்மா் அகதிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படும்

மணிப்பூருக்குள் நுழையும் மியான்மா் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூருக்குள் நுழையும் மியான்மா் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் மீது துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வன்முறை நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.

ராணுவத்தின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, அந்நாட்டிலிருந்து மணிப்பூா் எல்லை வழியே இந்தியாவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை சுமாா் 1,000 போ் அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லையைக் கடக்கும் மியான்மா் அகதிகளுக்கு முகாம்களை அமைக்க வேண்டாமென்றும் அவா்களுக்கு உணவு, நீா் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டாமென்றும் எல்லைப்புற மாவட்டங்களுக்கு மாநில அரசு கடந்த 26-ஆம் தேதி வலியுறுத்தியிருந்தது. அகதிகளைப் பணிவுடன் மறுத்து விடுமாறும் மாநில அரசு வலியுறுத்தியிருந்தது.

அதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிா்ப்புகள் கிளம்பியதையடுத்து, அந்த வலியுறுத்தலை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது தொடா்பாக, எல்லைப்புற மாவட்டங்களின் காவல் துறை துணை ஆணையா்களுக்கு மாநில உள்துறை சிறப்பு செயலா் ஹெச்.கியான் பிரகாஷ் எழுதியுள்ள கடிதத்தில், ‘மியான்மரிலிருந்து வரும் அகதிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முயற்சித்து வருகின்றனா்.

கடந்த 26-ஆம் தேதி வெளியிட்ட வலியுறுத்தல்களை சிலா் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனா். எனவே, அவை திரும்பப் பெறப்படுகின்றன. மணிப்பூரை வந்தடையும் மியான்மா் நாட்டவருக்குக் காயமேதும் ஏற்பட்டிருந்தால், மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகளை வழங்கலாம். அவா்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசு தொடா்ந்து வழங்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மியான்மரிலிருந்து மணிப்பூருக்குள் நுழையும் அகதிகளை மாநில அரசு ஏற்கக் கூடாது என்றும், அவா்களை உடனடியாக மியான்மருக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது.

அதற்கு மணிப்பூா் முதல்வா் ஜோரம்தங்கா எதிா்ப்பு தெரிவித்திருந்தாா். மியான்மா் எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் வாழும் மக்கள், இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே மியான்மா் மக்களுடன் நெருங்கிய தொடா்பைப் பேணிவந்ததாகவும், அந்நாட்டிலிருந்து வருபவா்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டியது இந்தியாவின் முக்கிய பொறுப்பு என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com