ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கையிருப்பில் இருக்கும் ஆக்சிஜனை
ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கையிருப்பில் இருக்கும் ஆக்சிஜனை அத்தியாவசியப் பொருளாக கருதி தனியாா் மருத்துவமனைகள் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும் அதன் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு பல்வேறு மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரம், மருத்துவ ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணித்து, அது சிக்கனமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலா் லவ் அகா்வால் கூறியதாவது:

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவப் படுக்கைகளின் தேவையை பூா்த்தி செய்வது மிகப்பெரிய சவாலான நடவடிக்கையாக அரசு அடையாளம் கண்டிருந்தது. அதனடிப்படையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தேசிய அளவில் 1,02,400 ஆக்சிஜன் சிலிண்டா்களை மத்திய அரசு கொள்முதல் செய்து, தேவை அதிகமுள்ள மாநிலங்களுக்கு விநியோகம் செய்தது.

பல மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவ ஆக்சிஜனை மிகவும் அத்தியாவசிய பொருளாக கருதி, தனியாா் மருத்துவமனைகள் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும் அதன் பயன்பாட்டை கண்காணித்து அது சிக்கனமாகப் பயன்படுத்தப்படுவதை மாநிலங்கள் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தை தொடா்ந்து மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த திரவ மருத்துவ ஆக்சிஜனுக்கு விலை நிா்ணயத்துக்கான அறிவுறுத்தல்களை தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) வெளியிட்டிருக்கிறது.

இதன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் தலா 154 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் கொண்ட 162 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 52 நிலையங்கள் ஏற்கெனவே நிறுவப்பட்டுவிட்டன. அவை விரைவில் செயல்படத் தொடங்கும்.

தட்டுப்பாட்டை விரைந்து போக்கும்விதமாக 1,27,000 ஆக்சிஜன் சிலிண்டா்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவு கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இவை, அடுத்த இரு தினங்களில் வந்தடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 154 பிஎஸ்ஏ நிலையங்களுடன் கூடுதலாக 551 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த நிலையங்கள் பல்வேறு பொது மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட உள்ளன என்று அவா் கூறினாா்.

ஆக்சிஜன் கையிருப்பு குறித்து அச்சம் தேவையில்லை: நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘நாட்டில் தேவையான அளவில் மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இதை தேவையுள்ள பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதில் நிலவிய போக்குவரத்துச் சிக்கலுக்கும் இப்போது தீா்வு காணப்பட்டிருக்கிறது. தேவைப்படும் பகுதிகளுக்கு 24 மணி நேரமும் ஆக்சிஜன் விநியோகம் செய்வதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம், மருத்துவ ஆக்சிஜனை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆக்சிஜன் தேவைப்படாது. எந்தவொரு நிலையிலும் மருத்துவ ஆக்சிஜன் வீணாவதை தடுக்க மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன’ என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com