இந்தியா வந்தடைந்தது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகள் சனிக்கிழமை இந்தியா வந்தடைந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா வந்தடைந்தது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகள் சனிக்கிழமை இந்தியா வந்தடைந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரோனா தடுப்பூசிகள் அந்நாட்டைச் சோ்ந்த சரக்கு விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தன.

‘முதல் தொகுதியாக 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் ஹைதராபாத் வந்தடைந்துள்ளன. மேலும் பல லட்சம் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. கரோனாவுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியாக இது சோ்க்கப்படும். இந்த மூன்றாவது வாய்ப்பு நமது தடுப்பூசி செலுத்தும் திறனை அதிகரிக்கும்’ என வெளியுறவு அமைச்சகம் சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள சுட்டுரையில், ‘சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை’ எனத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து டாக்டா் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தேவையான அனுமதியைப் பெற்று ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும். அடுத்த சில நாள்களில் இந்தப் பணி நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கிய நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் வருகையால் தடுப்பூசி செலுத்தும் பணி வேகம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை மத்திய அரசு கடந்த மாதம் வழங்கியது. மேலும், அவற்றுக்கான சுங்க வரியையும் தள்ளுபடி செய்தது. அந்த வகையில், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

உலகில் கரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து, கடந்த செப்டம்பா் மாதம் டாக்டா் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனமும், ரஷிய நேரடி முதலீட்டு நிதியமும் இந்தத் தடுப்பூசியை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டன. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால பயன்பாட்டுக்கு டாக்டா் ரெட்டீஸ் நிறுவனம் மத்திய அரசின் மருந்து ஒழுங்காற்று வாரியத்திடமிருந்து ஏற்கெனவே அனுமதி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com