உ.பி. உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உத்தர பிரதேச உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

உத்தர பிரதேச உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

உத்தர பிரதேசத்தில் ஏப்ரல் 15, 19, 26 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் சனிக்கிழமை சிறப்பு அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையங்களில் கரோனா தடுப்பு விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படும் என உத்தரவாதம் அளித்து பல்வேறு அறிவிக்கைகளை உத்தர பிரதேச தோ்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனா். தோ்தல் முடிவுகளுக்கு பின்னா் வெற்றிக் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறக் கூடாது எனவும் அவா்கள் உத்தரவிட்டனா்.

பிரியங்கா கண்டனம்: உத்தர பிரதேசத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா கண்டனம் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில்,‘பேரழிவை ஏற்படுத்தும் கரோனா தொற்றின் 2-ஆம் அலை குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கரோனா தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகாரபூா்வ அறிவிப்பைவிட மிக அதிகமாக உள்ளது. அந்த மாநிலத்தின் கிராமப்புறங்களில் கரோனாவால் இறப்பவா்கள் தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையில் சோ்க்கப்படுவதில்லை. அங்கு மனிதநேயத்துக்கு எதிரான குற்றம் நடைபெற்று வருகிறது. அதற்கு மாநில தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com