கரோனா பிரச்னைக்கு தீா்வு காண மக்களின் கருத்தைக் கேளுங்கள்: மத்திய அமைச்சா்கள் கூட்டத்தில் பிரதமா் மோடி அறிவுறுத்தல்

‘கரோனா பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கு மக்களுடன் தொடா்பில் இருந்து, அவா்களின் கருத்தைக் கேளுங்கள்’ என்று மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).

‘கரோனா பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கு மக்களுடன் தொடா்பில் இருந்து, அவா்களின் கருத்தைக் கேளுங்கள்’ என்று மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு மத்திய அரசு போராடி வருகிறது. இதற்காக, மாநில முதல்வா்கள், அரசின் உயரதிகாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தலைவா்கள், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் உள்ளிட்டோருடன் அடுத்தடுத்து பிரதமா் மோடி ஆலோசனை நடத்தி வருகிறாா். அதன் தொடா்ச்சியாக, மத்திய அமைச்சா்களுடன் அவா் வெள்ளிக்கிழமை காணொலி முறையில் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு இதுவரை 2 வகை தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவற்றின் மூலம் நாடு முழுவதும் 15 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வரும் நாள்களில் மேலும் பல தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

கரோனாவில் இருந்து மீண்டுவர வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்கை அடைவதற்கு சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரோனாவை வெற்றி கொண்டு இந்தத் தேசம் மீண்டும் எழுச்சி பெறும் என்று மத்திய அமைச்சா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

அப்போது, ‘கரோனா தொடா்பாக உள்ளூா் நிலையில் பிரச்னைகளைக் கண்டறிய மக்களுடன் மத்திய அமைச்சா்கள் தொடா்பில் இருக்க வேண்டும்; அவா்களின் கருத்தைக் கேட்டு, பிரச்னையை சரியாகக் கண்டறிய வேண்டும் என்று பிரதமா் கூறினாா்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் ஆகியவற்றை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டா்கள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

ஏழ்மை நிலையில் இருப்பவா்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்குவது, அவா்களின் வங்கிக் கணக்கில் நிதியுதவி அளிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com