மாநில மூலதன செலவினங்களுக்கு ரூ.15,000 கோடி நிதியுதவி: மத்திய நிதியமைச்சகம் முடிவு

மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்கான கூடுதல் நிதியுதவி திட்டத்தை நடப்பு 2021-22 நிதியாண்டிற்கும் நீட்டித்து, ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை முடிவு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்கான கூடுதல் நிதியுதவி திட்டத்தை நடப்பு 2021-22 நிதியாண்டிற்கும் நீட்டித்து, ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை முடிவு செய்துள்ளது.

மாநிலங்களுக்கு ஐம்பதாண்டுகளுக்கு வட்டியில்லாத கடனாக கொடுக்கப்படும் இந்தத் திட்டத்திற்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

‘கட்டுமானப் பணிகள், வளா்ச்சிப் பணிகள் போன்ற மூலதன செலவினங்கள் மூலமே வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இந்த முதலீடு எதிா்கால உற்பத்தித் திறனை மேம்படுத்தி பொருளாதார வளா்ச்சி விகிதத்தை அதிகரிக்கிறது. மத்திய அரசின் நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், கடந்த ஆண்டு இந்த ‘மூலதன செலவினங்களுக்கான மாநில சிறப்பு உதவிக்கான திட்டம்‘ தொடங்கப்பட்டது. 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் இந்தக் கடனுக்கு வட்டி கிடையாது என அறிவிக்கப்பட்டு, 2020-21 நிதியாண்டிற்கு ரூ.12, 000 கோடியை மத்திய அரசு அறிவித்தது. அதில் ரூ.11,830 கோடியை மாநிலங்களுக்கு வழங்கியது.

இதன்மூலம் இந்த நிதியை காரோனா நோய்த் தொற்று ஆண்டில் மாநிலங்கள் தங்கள் மூலதன செலவினங்களுக்காக தக்கவைத்துக்கொண்டன. இதனால், 2021-22 நிதியாண்டுக்கும் இந்தக் திட்டம் மாநிலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை மூன்றாகப் பிரித்து, நிதியுதவியை மாநிலங்களுக்கு வழங்குகிறது. முதல் பிரிவின்படி ஏழு வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்களுக்கு தலா ரூ. 200 கோடி வீதம் மொத்தம் ரூ.1,400 கோடி வழங்கப்படும். இதே பகுதியிலுள்ள அஸ்ஸாம், இமாச்சல பிரதேசம், உத்தரக்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு தலா ரூ.400 கோடி வழங்கப்படும். இதன்படி, இந்த 10 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இரண்டாவது பிரிவில், மீதமுள்ள மாநிலங்களுக்கு ரூ.7,400 கோடி பிரித்து அளிக்கப்படும். மத்திய வரிகளைப் பிரித்துக் கொடுக்க 15-ஆவது நிதி ஆணையம் வகுத்துள்ள விகிதாசாரங்கள்படி, இந்தத் தொகை மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். மூன்றாவது பிரிவில், மீதமுள்ள ரூ.5,000 கோடி ஒதுக்கப்படும். இதன்படி, மாநிலங்கள் தங்களது பொதுநிறுவனங்களில் பங்கு விலக்கல் முறையைப் பின்பற்றதுல் அல்லது மாநில பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துகளை பயனுள்ளதாக ஆக்கும் திட்டங்களை ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த வகையில் மாநிலங்களுக்கு இந்த ரூ.5,000 கோடி நிதி மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த 2021-22-ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல் மூலம் ரூ.1.75 கோடி நிதியை திரட்டும் என அறிவித்தாா். இதே போன்று மாநில அரசுகளும் செயல்பட்டால் மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கும் எனவும் அறிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com