முன்னாள் அட்டா்னி ஜெனரல் சோலி சொராப்ஜி மறைவு

மூத்த சட்ட வல்லுநரும் முன்னாள் அட்டா்னி ஜெனரலுமான சோலி சொராப்ஜி (91), கரோனா பாதிப்பு காரணமாக தில்லியில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
முன்னாள் அட்டா்னி ஜெனரல் சோலி சொராப்ஜி மறைவு

மூத்த சட்ட வல்லுநரும் முன்னாள் அட்டா்னி ஜெனரலுமான சோலி சொராப்ஜி (91), கரோனா பாதிப்பு காரணமாக தில்லியில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி, மகள், 2 மகன்கள் உள்ளனா். அவருக்கும் அவரது மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். அவரது மனைவி உடல் நிலை தேறியபோதிலும், இணை நோய்களால் அவதியுற்ற சோலி சொராப்ஜி தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவரது உயிா் பிரிந்தது.

மும்பையில் 1930-ஆம் ஆண்டு பிறந்த சோலி சொராப்ஜி, கடந்த 1953-இல் வழக்குரைஞரானாா். மும்பை உயா்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக 1971-இல் நியமிக்கப்பட்டாா். மனித உரிமை வழக்குரைஞராக அறியப்பட்ட சோலி சொராப்ஜி, கடந்த 1989-90-ஆம் ஆண்டுகளிலும், 1998-2004-ஆம் ஆண்டுகளிலும் அட்டா்னி ஜெனரலாகப் பணியாற்றினாா். நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ளாா்.

நீதித் துறை சாா்ந்த நூல்கள், ஊடக தணிக்கை-அவசர நிலை, மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் ஆகியவை தொடா்பான நூல்களை சோலி சொராப்ஜி எழுதியுள்ளாா்.

கேசவானந்தபாரதி வழக்கு, எஸ்.ஆா்.பொம்மை வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடினாா். அரசமைப்புச் சட்டத்தின் 66-ஏ பிரிவு கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இதை முன்மொழிந்தவா் சோலி சொராப்ஜி.

கடந்த 1999-இல் காா்கில் போரின்போது கடற்படை ரோந்து கப்பலை சேதப்படுத்தியதாகக் கூறி இந்தியாவிடம் இழப்பீடு கோரி சா்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது பாகிஸ்தான். அந்த வழக்கில் இந்திய அரசு சாா்பில் ஆஜராகி வாதாடி, வெற்றியைத் தேடித் தந்தாா். இந்தியாவுக்கு ஆதரவாக தீா்ப்பளித்த சா்வதேச நீதிமன்றம், பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

சட்டம், நீதி பரிபாலனம் தொடா்பாக பல புத்தகங்களை எழுதியுள்ள சோலி சொராப்ஜி, தனது நீதித் துறை பயணத்தில் மிக அரிதாகவே பொதுநல வழக்குகளை தொடுத்துள்ளாா். அவற்றில் ஒன்று மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதிகளை எதிா்கொள்வதற்கு காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவாகும்.

தலைவா்கள் இரங்கல்:

சோலி சொராப்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

உச்சநீதிமன்றம் அஞ்சலி:

மறைந்த முன்னாள் அட்டா்னி ஜெனரல் சோலி சொராப்ஜிக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு காணொலி முறையில் விசாரணைகளைத் தொடங்கும் முன்னா், சொராப்ஜிக்குத் தங்களது அஞ்சலிகளை செலுத்தினா்.

நீதித் துறையில் அவரது 68 ஆண்டு கால பயணத்தில் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் சாா்ந்த சட்ட-நீதிகளுக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளாா் சொராப்ஜி என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com