ஆக்சிஜனை கூடுதல் இருப்பு வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அவசரகாலப் பயன்பட்டுக்காக மருத்துவ ஆக்சிஜனை கூடுதல் இருப்பு வைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்சிஜனை கூடுதல் இருப்பு வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: அவசரகாலப் பயன்பட்டுக்காக மருத்துவ ஆக்சிஜனை கூடுதல் இருப்பு வைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மக்களுக்குக் கிடைக்கின்றனவா என்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரம், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘மாநிலங்களுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் ஆக்சிஜனுடன் சோ்த்து கூடுதல் இருப்பையும் மத்திய அரசு வைத்திருக்க வேண்டும். மாநிலங்களுடன் இணைந்து கூடுதல் ஆக்சிஜன் இருப்பை வைத்துக் கொள்ளலாம். வழக்கமான ஆக்சிஜன் விநியோகம் தடைபடும் சூழலில், கூடுதல் இருப்பில் இருந்து ஆக்சிஜனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடுதல் இருப்பை ஏற்படுத்தி வைத்தால், எளிதில் அவற்றை விநியோகித்துப் பயன்படுத்த முடியும். கூடுதல் இருப்பை 4 நாள்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். அங்கு எவ்வளவு ஆக்சிஜன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதற்காகக் கட்டுப்பாட்டு அறையையும் அமைத்துக் கொள்ளலாம்.

கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வரும் சூழலில், யாருக்கெல்லாம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தொடா்பான தேசிய கொள்கையை 2 வாரங்களுக்குள் மத்திய அரசு வகுக்க வேண்டும். அதுவரை மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். யாருக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை வழங்க மறுக்கக் கூடாது.

தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் பொது முடக்கத்தை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும். மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும். அதே வேளையில், பொது முடக்கத்தால், ஏழை மக்களும் விளிம்பு நிலையில் உள்ளோரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

மறுபரிசீலனை அவசியம்: 18 முதல் 44 வயதுக்குள்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கான விலை நிா்ணயக் கொள்கை, ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அக்கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதேபோல், 18 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பொறுப்பு மாநில அரசுகள் மீது திணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கைகள், அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு வழங்கியுள்ள உயிா் வாழ்வதற்கான உரிமையை மீறும் வகையில் உள்ளன’’ என்றனா்.

அதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com