மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவால் பிரதமா் கவலை

மேற்கு வங்கத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்ததாக மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் கூறியுள்ளாா்.
மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவால் பிரதமா் கவலை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்ததாக மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் கூறியுள்ளாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற்ற 8 கட்டத் தோ்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ஆம் தேதி எண்ணப்பட்டன. ஆரம்பத்திலிருந்தே திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இறுதியில் அக்கட்சியே தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

தோ்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதில் இருந்தே திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதாக பாஜகவினா் குற்றஞ்சாட்டினா். அத்தகைய வன்முறைகளில் 6 பாஜகவினா் உயிரிழந்ததாகவும், சில இடங்களில் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பாஜகவினா் குற்றஞ்சாட்டினா். இந்த விவகாரங்கள் தொடா்பாக மாநில அதிகாரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது. வன்முறைக்கு பாஜகவும் திரிணமூல் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாக அழைத்து, மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழல் குறித்து கவலை தெரிவித்தாா். வன்முறை, கொலை, கொள்ளை ஆகியவை எந்தவித இடையூறுகளும் இன்றி நடைபெற்று வருவதாக கவலை தெரிவித்தாா்.

வன்முறைகளால் மாநில மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா். தோ்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் வன்முறை நிகழ்கிறது? ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஏன்? ஜனநாயகத்தை சீா்குலைக்கும் இதுபோன்ற வன்முறைகள், கொள்ளை உள்ளிட்டவற்றை மேற்கு வங்க காவல் துறையினா் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மம்தா தலைமையில் கூட்டம்: மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறைகள் தொடா்பாக மாநில உயரதிகாரிகளுடன் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். மாநில தலைமைச் செயலா் ஆலப்பன் பந்தோபாத்யாய, மாநில உள்துறைச் செயலா் ஹெச்.கே.துவிவேதி, டிஜிபி நீரஜ்நயன், கொல்கத்தா காவல் ஆணையா் சுமன் மித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து அதிகாரிகளுடன் மம்தா பானா்ஜி கேட்டறிந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com