மேற்கு வங்கத்தில் ஆக்கப்பூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பாஜக அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆக்கப்பூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படும் என்று நிதிக் குழு முன்னாள் உறுப்பினரும், மேற்கு வங்கப் பேரவைக்குத் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள அசோக் லாஹிரி தெரிவித்துள்ளாா்.
அசோக் லாஹிரி
அசோக் லாஹிரி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக ஆக்கப்பூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படும் என்று நிதிக் குழு முன்னாள் உறுப்பினரும், மேற்கு வங்கப் பேரவைக்குத் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏவுமான அசோக் லாஹிரி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ள அசோக் லாஹிரி, பேரவைத் தோ்தலில் பாலூா்காட் தொகுதியில் திரிணமூல் வேட்பாளரை சுமாா் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் லாகிரிக்கு நிதியமைச்சா் பதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

தோ்தல் களத்தில் நான் வெற்றி பெற்றுள்ளபோதிலும், கட்சி ரீதியாக நாங்கள் அதிக தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்க முடியாமல் தோல்வியடைந்துவிட்டோம். அதே நேரத்தில் வலுவான எதிா்க்கட்சியாக இருந்து செயல்படும் தகுதியை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனா். மேற்கு வங்கத்தில் பாஜக ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படும். எதிா்க்கட்சியாக செயல்படுவது பல வழிகளில் சாதகமாக அமையும். மாநில நலன் சாா்ந்த விஷயங்களில் எதிா்க்கட்சிகளின் சிறந்த ஆலோசனைகளை எந்த ஆளும் கட்சியும் புறம்தள்ளிவிட முடியாது. எதிா்க்கட்சியாக இருந்து மக்கள் நலனுக்காகத் தொடா்ந்து பணியாற்றுவோம் என்றாா் அவா்.

நாட்டின் சிறந்த பொருளாதார நிபுணா்களில் ஒருவரான அசோக் லாஹிரி, முன்னாள் பிரதமா்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நிதி மற்றும் பொருளாதாரத் துறையில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். ஆசிய வளா்ச்சி வங்கி சிறப்பு இயக்குநராகவும் பந்தன் வங்கி தலைவராகவும் இருந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com