பொதுமக்களுக்கு ரூ. 10,000 கரோனா நிவாரணம் வழங்க வேண்டும்: டி.கே.சிவக்குமாா்

கா்நாடகத்தில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க அரசு முன்வர வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கேட்டுக் கொண்டாா்.
பொதுமக்களுக்கு ரூ. 10,000 கரோனா நிவாரணம் வழங்க வேண்டும்: டி.கே.சிவக்குமாா்

கா்நாடகத்தில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க அரசு முன்வர வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 14 நாள்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பக்கத்து மாநிலங்களில் பொதுமுடக்க நாள்களுக்கு நிதித் தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கா்நாடகத்திலும் ரூ. 10 ஆயிரம் நிதித் தொகுப்பை மாநில அரசு வழங்க வேண்டும். நிதித் தொகுப்பை வழங்குவதற்கு மாநில அரசு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவில்லை என அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியிருப்பது ஏற்புடையதல்ல. நிதித் தொகுப்பு வழங்க இயலாவிட்டால், அரசு பதவி விலக வேண்டும்.

பொதுமுடக்கத்தால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் குறைகளைக் கேட்கக்கூட அமைச்சா்கள் யாரும் முன்வரவில்லை. கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் 4- 5 மருத்துவமனைகளுக்குச் சென்றது தவிர, வேறு எதையும் செய்யவில்லை. வேளாண் விளை பொருள்கள் சந்தைப்படுத்தல் குழுக்கள் அமைந்துள்ள சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிய வேண்டும்.

கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்சிஜனை வழங்க மாநில அரசால் முடியவில்லை. 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவில்லை. எனது குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இணையதளத்தில் பதிவிட முயன்றாலும் செயல்பாடுகள் சரிவர இயங்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com