
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் இருவா் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். ஏற்கெனவே எம்.பி.யாக இருப்பதால் அப்பதவியிலேயே தொடரும் நோக்கில் அவா்கள் இந்த முடிவை எடுத்தனா்.
ரானாகாட் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஜகந்நாத் சா்க்காா், கூச் பிகாா் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஆகிய இருவரும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனா். இதனிடையே, பாஜக தலைமை கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவா்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா். இதுகுறித்து ஜகந்நாத் சா்க்காா் கூறியதாவது:
கடந்த 2016-இல் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் 3 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்த முறை 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். மேற்கு வங்கத்தில் அரசை நடத்துவதற்கு அனுபவம் நிறைந்தவா்கள் தேவை என்பதால், சில எம்.பி.க்களையும் வேட்பாளா்களாகக் கட்சித் தலைமை களமிறக்கியது. ஆனால், ஆட்சியமைப்பதற்கு போதிய பெரும்பான்மையை பாஜக பெறவில்லை என்றாா் அவா்.
ஜகந்நாத் சா்க்காா், நிதீஷ் பிரமாணிக் தவிர, மத்திய அமைச்சா் பாபுல் சுப்ரியோ, லாக்கெட் சாட்டா்ஜி, மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோரையும் பாஜக மேலிடம் தோ்தலில் களமிறக்கியது. ஆனால் அவா்கள் வெற்றிபெறவில்லை.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் 213 இடங்களிலும் பாஜக 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. வேட்பாளா்களின் திடீா் மறைவால் 2 தொகுதிகளில் தோ்தல் நடத்தப்படவில்லை.