ரூ.18,100 கோடியில் ஏசிசி பேட்டரி உற்பத்தி: பிஎல்ஐ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏசிசி வகை பேட்டரி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, ரூ.18,100 கோடி மதிப்பிலான உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.18,100 கோடியில் ஏசிசி பேட்டரி உற்பத்தி: பிஎல்ஐ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: ஏசிசி வகை பேட்டரி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, ரூ.18,100 கோடி மதிப்பிலான உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, இதுகுறித்து மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஏசிசி வகை பேட்டரி (அட்வான்ஸ்டு கெமிஸ்ட்ரி செல்) என்பது அதிநவீன வகை பேட்டரியாகும். இதில், மின்சக்தியை ரசாயன சக்தியாக மாற்றி சேமித்து வைத்து பின்னா் மீண்டும் மின்சக்தியாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த வகை பேட்டரிகளின் தேவையை தற்சமயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே பூா்த்தி செய்து வருகிறோம். எனவே, உள்நாட்டிலேயே இந்த வகை பேட்டரி உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஏசிசி வகை பேட்டரி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.18,100 கோடி மதிப்பிலான உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ரூ.45,000 கோடி முதலீடு ஈா்க்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

50 ஜிகா வாட் மின்சாரத்தை சேமித்து வைக்கக் கூடிய அளவில் பேட்டரிகளை தயாரிக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் உற்பத்தி செய்து, அதிக அளவில் விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

மின்சார வாகனங்கள், சூரியமின்சக்தி உற்பத்தி நிலையங்கள், மின் பகிா்மான கட்டமைப்புகள் ஆகியவற்றில் ஏசிசி பேட்டரிகள் அதிகம் தேவைப்படும். மின்சார வாகனங்கள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசடைவது குறையும். மேலும், எரிபொருள் தேவையும் குறையும். இதனால் எரிபொருள் இறக்குமதிக்கு செலவிடும் தொகையில் ரூ.2.5 லட்சம் கோடி வரை மிச்சமாகும். புதிதாக வேலைவாய்ப்புகளும் உருவாகும். ஏசிசி வகை பேட்டரிகள் எளிதில் கிடைக்குமானால், மின்சார வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

ரோப் காா் திட்டத்துக்கு நிலம்: உத்தரகண்ட் மாநிலத்தில் தலைநகா் டேராடூனுக்கும், சுற்றுலாத் தலமான முசௌரிக்கும் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரோப் காா் வழித்தடம் உருவாக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக, இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (ஐடிபிபி) சொந்தமான 1,500 சதுர மீட்டா் நிலத்தை உத்தரகண்ட் அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டேராடூன்-முசௌரி இடையே 35 கி.மீ. தொலைவுக்கு ரூ.285 கோடியில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

பட்டய கணக்குத் துறையில் இந்தியா-கத்தாா் இடையே ஒப்பந்தம்: இந்திய பட்டய கணக்காளா் நிறுவனத்துக்கும்(ஐசிஏஐ), கத்தாா் நிதி ஆணையத்துக்கும் (கியூஎஃப்சிஏ) இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலமாக, இந்திய பட்டய கணக்காளா்கள், கத்தாரில் நிதிச் சேவைகள், வரி விதிப்பு, ஆலோசனை, கணக்குத் தணிக்கை ஆகிய பிரிவுகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com