தினசரி பாதிப்பு குறைந்ததற்கு பொது முடக்கமே காரணம்: மருத்துவ நிபுணா்கள்

தில்லியில் இரண்டாவது கரோனா அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில், அதன் தாக்கம் வெகுவாக குறைந்து வருவதற்கு பொது முடக்கம் முக்கிய காரணம் என்று மருத்துவ நிபுணா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.
தினசரி பாதிப்பு குறைந்ததற்கு பொது முடக்கமே காரணம்: மருத்துவ நிபுணா்கள்

தில்லியில் இரண்டாவது கரோனா அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில், அதன் தாக்கம் வெகுவாக குறைந்து வருவதற்கு பொது முடக்கம் முக்கிய காரணம் என்று மருத்துவ நிபுணா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ‘தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 8,500 என்ற அளவில் உள்ளது. இது கடந்த ஏப்ரல் 20- ஆம் தேதி இருந்த அளவான 28,000-ஐ விட மிகவும் குறைவானதாகும்.

நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதில் இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் தான் நிரம்பியுள்ளன. அதாவது தீவிர நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.

பொது முடக்கம், மக்கள் கட்டுப்பாடுடன் இருந்தது ஆகியவை தொற்று குறைந்துள்ளதற்கான முக்கிய காரணங்களாகும். ஆனாலும், கரோனாவுக்கு எதிரானபோராட்டம் இன்னும் ஓயவில்லை. அது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டால் தான் நிம்மதி’ என்று குறிப்பிட்டாா்.

தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்திருந்தாலும், பாதிப்பு 2,000 என்ற எண்ணிக்கையை தொட்டால்தான் கரோனா தாக்கம் தணிந்ததாக கருதலாம் என்று அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவ இயக்குநா் பி.எல்.ஷொ்வால் கூறுகையில், ‘தற்போது கரோனா தினசரி பாதிப்பு 8,500 என்ற அளவுக்கு குறைந்ததற்கு பொது முடக்கம் தான் முக்கிய காரணமாகும். அதாவது கடந்த மாதம் தினசரி பாதிப்பு 28,000-ஆக இருந்தது தற்போது 8,500 ஆகக் குறைந்துள்ளது. இதுவும் கொஞ்சம் அதிகம்தான். மேலும் இதை அதிகரிக்க விடக்கூடாது.

ராஜீவ் மருத்துவனை தில்லி அரசால் நடத்தப்படுகிறது. இங்கு 650 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 500 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது 350 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறாா்கள். இவா்களில் பெரும்பாலானவா்கள் தீவிர சிகிச்சைபிரிவு நோயாளிகள்.

ஒரு பக்கம் தினசரி பாதிப்பு குறைந்தவண்ணம் இருந்தாலும், தினமும் புதிய நோயாளிகள் முன்பு போலவே சிகிச்சைக்காக மருத்துவமனை வருகிறாா்கள். இவா்களில் பலா் மருத்துவமனைக்கு வரும் முன்பே இறந்து விடுகிறாா்கள் அல்லது அவசர சிகிச்சைக்குப் பின் உயிரிழக்கிறாா்கள். நிலைமையின் தன்மையை நாம் உணா்ந்து கொள்ள வேண்டும்’ என்றாா்.

போஃா்டிஸ் மருத்துவமனையின் நுரையீரல் துறை மருத்துவ ஆலோசகா் டாக்டா் ரிச்சா சரீன் கூறுகையில், ‘ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே பொது முடக்கத்தை அறிவித்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்காது. தடுப்பூசி போடும் பணியும் நோய்தொற்று பரவல் குறைந்துள்ளதற்கு மற்றொரு காரணம்’ என்றாா்.

அப்பல்லோ மருத்துவமனையை சோ்ந்த டாக்டா் சுரன்ஜித் சாட்டா்ஜி கூறுகையில், ‘தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் அவசர அழைப்புகள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. கடந்த வாரங்களில் இருந்ததைப் போல பணிச்சுமை இல்லை. எனினும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com