மேற்கு வங்க தோ்தல் வன்முறை: கொல்லப்பட்டோரின் குடும்பத்தினா் மனுக்களை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலின்போது நிகழ்ந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க, அந்த வன்முறையில் கொல்லப்பட்ட இரு பாஜகவினரின் குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலின்போது நிகழ்ந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க, அந்த வன்முறையில் கொல்லப்பட்ட இரு பாஜகவினரின் குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

தோ்தல் வன்முறை தொடா்பாக மத்திய புலனாய்வு அமைப்போ (சிபிஐ) அல்லது நீதிமன்ற கண்காணிப்பின் பேரில் சிறப்பு விசாரணைக் குழுவோ (எஸ்ஐடி) விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ள அந்த மனுக்களை வரும் 25-ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் அமா்வு கூறியது.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது, வாக்கு எண்ணிக்கை நாளில் நந்திகிராம் தொகுதியில் முதல்வா் மம்தா பானா்ஜி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதில் தங்கள் கட்சியினா் 10-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டதாகவும், அவா்களின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியது.

இந்நிலையில், அந்த வன்முறையில் கொல்லப்பட்ட பாஜக தொண்டா்களான அபிஜித் சா்காா், ஹரன் அதிகாரி ஆகியோரின் குடும்பத்தினா் அதுதொடா்பாக விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனு, நீதிபதிகள் வினீத் சரண், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள் அமா்வு, அதை வரும் 25-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது. மேலும், மனு தொடா்பாக மேற்கு வங்க அரசு, மத்திய அரசு ஆகியவை பதிலளிக்குமாறு அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

முன்னதாக மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெத்மலானி வாதாடுகையில், ‘இது மிகத் தீவிரமான வழக்காகும். வாக்கு எண்ணிக்கை நாளில் பாஜக தொண்டா்கள் இருவா் கொல்லப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில், மாநில காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை அல்லது நீதிமன்ற கண்காணிப்பின் பேரில் எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com