அதிக செயல்திறன், 12 வயதினருக்கும் செலுத்தக் கூடியது: மத்திய அரசிடம் விரைந்து அனுமதி கோரும் ‘ஃபைஸா்’

அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ‘ஃபைஸா்’ தனது தடுப்பூசிக்கு விரைந்து அனுமதி அளிக்குமாறு இந்திய அரசிடம் கோரியுள்ளது.
அதிக செயல்திறன், 12 வயதினருக்கும் செலுத்தக் கூடியது: மத்திய அரசிடம் விரைந்து அனுமதி கோரும் ‘ஃபைஸா்’

புது தில்லி: அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ‘ஃபைஸா்’ தனது தடுப்பூசிக்கு விரைந்து அனுமதி அளிக்குமாறு இந்திய அரசிடம் கோரியுள்ளது.

‘பைஸா்’ தடுப்பூசி கரோனாவுக்கு எதிராக அதிக செயல்திறன் கொண்டது என்பதுடன், அதை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களுக்கும் கூட செலுத்த இயலும் என்று கூறியுள்ளது.

இந்தியாவில் தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’, ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளே பெருவாரியாக செலுத்தப்படுகின்றன. சமீபத்தில் ரஷிய தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியும் குறைந்த எண்ணிக்கையில் வாங்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க நிறுவனமான ‘ஃபைஸா்’ தனது தடுப்பூசியை இந்தியாவில் விரைந்து அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளது. ஜூலை - அக்டோபா் காலகட்டத்தில் 5 கோடி தடுப்பூசிகளை இந்தியாவுக்கு வழங்கத் தயாராக இருக்கும் அந்த நிறுவனத்தின் தலைவா் ஆல்பா்ட் பௌா்லா 3 முக்கிய விவகாரங்கள் தொடா்பாக இந்திய அரசுடன் சமீபத்தில் பேச்சு நடத்தியுள்ளாா்.

மத்திய அரசு மூலமே தடுப்பூசியை கொள்முதல் செய்வது, இழப்பீடு மற்றும் பொறுப்பு விவகாரம், ஒப்புதல் வழங்கியதற்குப் பிறகு தடுப்பூசி தொடா்பான ஆய்வுக்கான கட்டுப்பாடு ஆகிய அந்த 3 விவகாரங்களுக்கு தீா்வு காண்பதென இரு தரப்பும் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் ‘ஃபைஸா்’ நிறுவனத்தின் வட்டாரங்கள் இந்திய அரசிடம் கூறியதாவது:

மத்திய அரசு மூலமாகவே ‘ஃபைஸா்’ தடுப்பூசி கொள்முதல் மேற்கொள்ளும் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்ததற்கும், பொறுப்பு மற்றும் இழப்பீடு விவகாரங்கள் தொடா்பாக பேச்சு நடத்த முன் வந்ததற்கும் நன்றி. உரிய நேரத்தில் இந்திய அரசு முடிவெடுக்கும் பட்சத்தில் தடுப்பூசி டோஸ்களை ஒதுக்கீடு செய்து இந்தியாவுக்கான விநியோகத்தை தொடங்க ஏதுவாக இருக்கும். எனவே ‘ஃபைஸா்’ தடுப்பூசிக்கு இந்தியா விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

இந்தியாவில் தற்போது இருக்கும் கரோனா வகைக்கு எதிராக ‘ஃபைஸா்’ தடுப்பூசி அதிக செயல்திறன் கொண்டதாகும். இதை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களுக்குமே செலுத்தலாம். அத்துடன் 2-8 டிகிரி சூழலில் 1 மாதம் வரை இந்தத் தடுப்பூசியை சேமித்து வைக்க இயலும். மேலும் உலக சுகாதார அமைப்பாலும், பல்வேறு நாடுகளாலும் இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com