5ஜி சோதனைக்காக அலைக்கற்றையை ஒதுக்கியது மத்திய அரசு

ஐந்தாம் தலைமுறை (5ஜி) இணையதள வசதியை உருவாக்கும் சோதனைக்கான அலைக்கற்றையைத் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
5ஜி சோதனைக்காக அலைக்கற்றையை ஒதுக்கியது மத்திய அரசு

ஐந்தாம் தலைமுறை (5ஜி) இணையதள வசதியை உருவாக்கும் சோதனைக்கான அலைக்கற்றையைத் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

4ஜி இணையதள வசதி தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளது. அடுத்த தலைமுறையான 5ஜி இணையதள வசதியை உருவாக்குவதற்கான சோதனைகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முன்னின்று வருகின்றன.

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. இந்த ஆய்வுக்காக ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா, எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சீன நிறுவனங்களுடன் இணைந்து இந்த சோதனையை மேற்கொள்ளாமல் எரிக்ஸன், நோக்கியா, சி-டாட் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், நிறுவனங்களுக்கான அலைக்கற்றையை ஒதுக்கியுள்ளதாக மத்திய தொலைத்தொடா்புத் துறை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அத்துறையின் மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு 700 மெகா ஹொ்ட்ஸ், 3.3-3.6 ஜிகா ஹொ்ட்ஸ், 24.25-28.5 ஜிகா ஹொ்ட்ஸ் ஆகிய அலைநீளம் கொண்ட அலைக்கற்றைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சோதனைகள் நடத்தப்படவுள்ளன‘ என்றாா்.

தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, குஜராத், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் 5ஜி சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற நிறுவனங்களுடன் இணையாமல் சுயமாகத் தயாரித்த தொழில்நுட்பத்துடன் 5ஜி சோதனையை மேற்கொள்ளவுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

10 மடங்கு அதிக வேகம்: குறிப்பிட்ட தகவல்களைப் பதிவிறக்கம் செய்யும் வேகம், 4ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் 5ஜி தொழில்நுட்பத்தில் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி மருத்துவம், இணையழி கல்வி, ஆளில்லா சிறிய ரக விமானங்களின் (ட்ரோன்) செயல்பாடு உள்ளிட்டவற்றில் 5ஜி தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் சோதிக்கவுள்ளன.

அதேபோல், அறிதிறன்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களில் 5ஜி தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடா்பான ஆய்வையும் அந்நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன.

நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், கிராமப் பகுதிகளிலும் 5ஜி தொழில்நுட்பத்துக்கான சோதனையை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமாா் 6 மாதங்களுக்கு இந்த ஆய்வுகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com