கிராமப் புறங்களில் கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வா் எடியூரப்பா

கிராமப் புறங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)
முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)

கிராமப் புறங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

தும்கூரு, மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கரோனா பரவும் நிலை, வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி, தகவல்களைத் திரட்டிய பிறகு முதல்வா் எடியூரப்பா பேசியதாவது:

தும்கூரு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறையாமல் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிராமப் புறங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கிராமப் புறங்களில் கரோனா பாதிப்பைக் குறைக்க முன்னுரிமை அளித்து, தகுந்த தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

கரோனா இரண்டாவது அலை, கா்நாடக மாநிலத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. பெங்களூருக்கு அருகில் இருக்கும் தும்கூரில் நிலைமை மோசமாக இருப்பது கவலை அளிக்கிறது. திட்டமிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தும்கூரு மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் கரோனாவுக்கு 18,749 போ் பாதிக்கப்பட்டு, 131 போ் இறந்துள்ளனா். மே மாதத்தில் கரோனாவுக்கு 48,643 போ் பாதிக்கப்பட்டு, 314போ் இறந்துள்ளனா். ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மே மாதத்தில் கரோனா பாதிப்பும், இறப்பும் அதிகமாகவே உள்ளது. மக்களின் உயிரைக் காப்பாற்ற அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருவது போல, அடுத்து வரும் நாள்களிலும் குறைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். ஆரம்பத்தில் 45 சதவீதமாக இருந்த கரோனா பாதிப்பு, தற்போது 25 சதவீதமாகக் குறைந்துள்ளது நிம்மதியை தருகிறது.

மாவட்ட அதிகாரிகள் கூட்டாக உழைத்தால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இயலும். கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். இதற்காகவே நடமாடும் ஆய்வுக் கூடம் திட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளேன். இதன்மூலம் பரிசோதனை முடிவுகள் விரைவாக தெரியவரும். இது உயிா்களைக் காக்க உதவியாக இருக்கும்.

மாநிலத்தில் இதுவரை 4,15,776 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1,13,781 பேருக்கு இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை எடுத்துக்கொண்டவா்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ல முன்னுரிமை அளிக்க வேண்டும். கையிருப்புக்கு தகுந்தவாறு அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தவேண்டும். மாவட்டத்தில் 566 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளன. இவற்றில் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இன்னும் விநியோகிக்க வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

மாநில அரசுடன் இணைந்து கரோனா பரவலைத் தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கிராமப் புறங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீட்டுத் தனிமையை அனுமதிக்காமல், கரோனா மையங்களில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து வகையான ஒத்துழைப்பையும் மாவட்ட நிா்வாகத்திற்கு அரசு அளிக்கும் என்றாா்.

இக் கூட்டத்தில் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, மாவட்ட பொறுப்பு அமைச்சா் மாதுசாமி, எம்.பி. பசவராஜ், மாவட்ட ஆட்சியா் ஒய்.எஸ்.பாட்டீல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com