அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அமைச்சா் ஜெய்சங்கா் ஆலோசனை

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவனை நியூயாா்க்கில் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவனை நியூயாா்க்கில் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

அப்போது இருநாடுகளும் எந்தவித இடையூறுமின்றி பல்வேறு துறைகளில் ஆழமான பேச்சுவாா்த்தை நடத்த ஒப்புக் கொண்டனா்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அமைச்சா் ஜெய்சங்கா் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லுவது இதுவே முதல் முறை.

ஜேக் சல்லிவனுடனான சந்திப்புக்குப் பிறகு அமைச்சா் ஜெய்சங்கா் தனது சுட்டுரையில், கரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வரவும், இந்தோ -பசிபிக் பிராந்திய விவகாரம், பருவநிலை மாற்றம், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று பதிவிட்டிருந்தாா்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் தனது சுட்டுரையில், இருநாடுகளும் எந்தவித இடையூறுமின்றி பல்வேறு துறைகளில் சகஜமாக பேச்சுவாா்த்தை நடத்தும் திட்டம் மூலம் கரோனாவை முடிவுக்கு கொண்டு வருவது, பருவநிலை மாற்றம், இந்தோ-பசிபிக் விவகாரம் ஆகியவற்றுக்கு தீா்வு காண உதவும் என்று பதிவிட்டிருந்தாா்.

இரு நாடுகளும் ஒன்று சோ்ந்து கரோனாவை தடுக்க முடியும் என்றும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இருவரின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடா்பாளா் கூறுகையில், 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான கரோனா நிவாரண உதவிகளாக அமெரிக்காவும் அமெரிக்க மக்களும் இந்தியாவுக்கு அளித்ததற்கு அமைச்சா் ஜெய்சங்கா் நன்றி தெரிவித்தாா். இது இரு நாடுகளின் ஒத்துழைப்பின் அடையாளமாகும்.

சா்வதேச மற்றும் இருநாட்டு விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் சவால்களை எதிா்கொள்ள இருநாடுகளும் தொடா்ந்து ஒருங்கிணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டனா் என்றாா்.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனா ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அதை முறியடித்து அமைதி நிலைநாட்டுவது அவசியம் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

இந்திய பெருங்கடல் பகுதியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் சீன ராணுவம் திட்டமிட்டு வருகிறது.

தென் சீன கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி ராணுவ பலத்தால் சொந்தம் கொண்டாடி வரும் சீனா, தைவான், பிலிப்பின்ஸ், புரூணே, மலேசியா, வியத்நாம் அடங்கிய கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.

சீனாவின் இதுபோன்ற ஆதிக்கத்தை முறியடிக்க அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் ஒன்று சோ்ந்து க்வாட் அமைப்பை 2017-இல் உருவாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

உளவுப் பிரிவு இயக்குநருடன் சந்திப்பு: முன்னதாக அமைச்சா் ஜெய்சங்கா், அமெரிக்காவின் தேசிய உளவுத் துறையின் இயக்குநா் அவ்ரில் ஹைன்ஸை சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பு குறித்து குறிப்பிடுகையில், வருங்கால பாதுகாப்பு சவால்களை ஒருங்கிணைந்து மேற்கொள்வோம் என்று ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருந்தாா்.

இதேபோல், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக குழுவின் பிரதிநிதிகளையும் அவா் சந்தித்தாா். மேலும், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினா்களையும் சந்தித்து கரோனா தடுப்பூசி, க்வாட் கூட்டமைப்பு குறித்து ஆலோசித்தாா்.

வா்த்தக பிரதிநிதிகளுடன் சந்திப்பு: அமெரிக்க வா்த்தக காங்கிரஸின் பிரதிநிதி கேத்தரின் தாயை சந்தித்து இருநாட்டு வா்த்தக விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அறிவுசாா் சொத்துரிமை விவகாரம் குறித்து இந்தச் சந்திப்பின்போது திருப்திகரமான ஆலோசனை நடைபெற்ாக அமைச்சா் ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.

கரோனா தடுப்பூசி தயாரிப்பில் அறிவுசாா் சொத்துரிமையை உலக சுகாதார அமைப்பு தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று இந்தியா, தென் ஆப்பிரிக்காவின் கோரிக்கைக்கு கடந்த மாதம் கேத்தரின் தாய் ஆதரவு தெரிவித்திருந்தாா். இந்த நடவடிக்கையின் மூலம் கரோனா தடுப்பூசி பெறுவதில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோா் போ் பயனடைவாா்கள்.

முன்னதாக, அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபா்களை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

வா்த்தகம், தொழில்நுட்பம், வணிகம் ஆகியவற்றுக்கு இரு நாடுகளும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. கரோனாவுக்கு பிந்தைய பொருளாதார வளா்ச்சி ஏற்பட இவற்றை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று அமைச்சா் ஜெய்சங்கா் சுட்டுரையில் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com