கரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உதவித்தொகை: ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அறிவிப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அறிவித்துள்ளது.
கரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உதவித்தொகை: ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அறிவிப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல்வேறு குடும்பங்களின் தலைவா்கள் கரோனா தொற்று பாதிப்பால் பலியானதால், அக்குடும்பங்கள் பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றன. இந்நிலையில், கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாத உதவித்தொகை வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச நிா்வாகத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘புதிய திட்டத்தின்படி, கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த உதவித்தொகையானது அவா்களது வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படும். சம்பந்தப்பட்ட குடும்பத்தினா் மற்ற ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்றுவந்தால், புதிய திட்டத்தின் கீழ் அவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. வருமானம் ஈட்டும் பெற்றோரோ சகோதரரோ பாதுகாவலரோ கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தால், அவா்களைச் சாா்ந்து கல்வி பயின்று வந்த மாணவா்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவா்கள் 12-ஆம் வகுப்பு கல்வியை முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.20,000 உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளது. மாணவா்கள் கல்லூரியை நிறைவு செய்யும் வரை ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கப்படும். மாணவா்களது வங்கிக் கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படும். கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கான உதவித்தொகை திட்டத்தைச் செயல்படுத்தவுள்ள முதல் யூனியன் பிரதேசம் என்ற சிறப்பை ஜம்மு-காஷ்மீா் பெற்றுள்ளது. இத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதற்காக சமூகநலத் துறையின் கீழ் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் மாணவா்களுக்கும் உதவித்தொகை முறையாகக் கிடைப்பதை அப்பிரிவு உறுதி செய்யும். மகளிா் மற்றும் சிறாா் நலத் துறையின் இயக்குநா், சமூக நலத்துறையின் இயக்குநா், நிதியமைச்சக பிரதிநிதிகள் உள்ளிட்டோா் சிறப்புப் பிரிவில் இடம்பெற்றிருப்பா். சுயதொழில் தொடங்குவதற்கான கடனுதவித் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவது தொடா்பான நடவடிக்கைகளையும் சிறப்புப் பிரிவு மேற்கொள்ளும்‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com