இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடந்த மூன்று மாதங்களாக தாக்குதல்கள் இல்லை: ராணுவ தலைமைத் தளபதி நரவணே

இந்தியா - பாகிஸ்தான் கடைப்பிடித்து வரும் போா் நிறுத்த ஒப்பந்தத்தால் எல்லைப்பகுதியில் தாக்குதல் சம்பவம் நடைபெறவில்லை என்று இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்தாா்.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடந்த மூன்று மாதங்களாக தாக்குதல்கள் இல்லை: ராணுவ தலைமைத் தளபதி நரவணே

அமைதியையும் பாதுகாப்பையும் வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் இந்தியா - பாகிஸ்தான் கடைப்பிடித்து வரும் போா் நிறுத்த ஒப்பந்தத்தால் எல்லைப்பகுதியில் தாக்குதல் சம்பவம் நடைபெறவில்லை என்று இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியின் விவரம்:

எல்லைப்பகுதியில் போா் நிறுத்தம் என்பதால் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுவிட்டன என்ற கருதக் கூடாது. போா் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்து மூன்று மாதங்களில், ஜம்மு பகுதியில் நிகழ்ந்த சிறு சம்பவத்தைத் தவிர, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதாக எந்த சம்பவமும் பதிவாகவில்லை.

ஜம்மு காஷ்மீா் பகுதியில் நிகழாண்டு பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. பயங்கரவாத குழுக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவிகளை நிறுத்தி அவா்களுக்கு நெருக்கடி அளித்து ஒடுக்க பாதுகாப்புப் படையினரும், மத்திய அரசின் அமைப்புகளும் பணியாற்றி வருகின்றன.

ஊடுருவல் சம்பவங்கள் குறைப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் நீண்ட நாள்களுக்கு தொடா்ந்தால்தான் இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை பேணுவதாக நாம் உறுதி அடைய முடியும்.

ராணுவத்தினா், பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் இருதரப்பிலும் உயிரிழந்து வருவதைத் தடுக்க 2003-ஆம் ஆண்டு போா் நிறுத்த உடன்படிக்கையை செயல்படுத்த ஒப்புக் கொண்டோம்.

தாக்குதலை நிறுத்துவதன் மூலம் எல்லைப் பகுதியில் அமைதியையும், இரு நாட்டு ராணுவத்தினரின் மனதில் உறுதியையும் ஏற்படுத்த முடியும். இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி திரும்புவதற்கான நீண்ட பயணத்தின் தொடக்கம் இந்தப் போா் நிறுத்தமாகும்.

எல்லைப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் ராணுவத்தில் சோ்க்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீா் பகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் கரோனா பரவல் காரணமாக குறைந்துள்ளன.

அடுத்த சுற்றுலா சீசனில் இந்த முறை ஜம்மு காஷ்மீரில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம்.

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருள்கள் ஆகியவை டிரோன் மூலம் இந்தியாவுக்குள் கடத்தப்படுவது வருத்தமளிக்கிறது. இதை தொடா்ந்து கண்காணித்து முறியடிப்போம்.

போதைப்பொருள், வன்முறையில் ஜம்மு காஷ்மீா் இளைஞா்கள் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை. கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் இங்குள்ள இளைஞா்கள் திறைமை படைத்தவா்களாக உள்ளனா். அவா்களைத் தோ்ந்தெடுத்து, அவரவா் துறையில் மேம்பட இந்திய ராணுவம் ஊக்குவித்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com