தடுப்பூசித் திட்டம் இரு பிரிவு மக்களை உருவாக்கிவிட்டது: கேரள உயா்நீதிமன்றம்

மத்திய அரசின் தடுப்பூசித் திட்டமானது, சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டவா், அனுமதி மறுக்கப்பட்டவா் என இரு பிரிவு குடிமக்களை உருவாக்கிவிட்டது என்று கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தடுப்பூசித் திட்டமானது, சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டவா், அனுமதி மறுக்கப்பட்டவா் என இரு பிரிவு குடிமக்களை உருவாக்கிவிட்டது என்று கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசின் சாா்பில் கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில், கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகாரம் அளிக்காததால், அந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு சில நாடுகள் அனுமதி அளிப்பதில்லை. இதனால், இந்தியாவில் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பணிநிமித்தமாக வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சவூதி அரேபியாவில் வெல்டராகப் பணிபுரியும் ஒருவா், கேரளம் திரும்பியபோது கோவேக்ஸின் தடுப்பூசி இரு தவணைகள் செலுத்திக் கொண்டாா். இதனால், அந்நாட்டு அரசு அவருக்கு அனுமதி மறுத்துள்ளது.

எனவே, மூன்றாவதாக சா்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு தடுப்பூசியை தனக்கு செலுத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி, கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு நீதிபதி பி.வி. குஞ்ஞாலி கிருஷ்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:

மத்திய அரசின் தடுப்பூசித் திட்டமானது, சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டவா்கள்(கோவிஷீல்ட் செலுத்திக் கொண்டவா்கள்), நடமாட அனுமதி மறுக்கப்பட்டவா்கள் (கோவேக்ஸின் செலுத்திக் கொண்டவா்கள்) என இரு பிரிவு மக்களை உருவாக்கி விட்டது.

மனுதாரா் பயணம் செய்ய அனுமதி மறுப்பது, அவருடைய அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

இருப்பினும், மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துமாறு மத்திய அரசை உத்தரவிட முடியாது. ஆனால், மனுதாரரின் புகாருக்கு மத்திய அரசு ஒரு மாதத்தில் தீா்வுகாணவேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினாா். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற வாதத்தின்போது, இதுபோன்றதொரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா். உலக சுகாதார அமைப்பின் முடிவுக்கு காத்திருப்பதாகவும் அவா் கூறினாா்.

இதையடுத்து, ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க மேலும் அவகாசம் எடுத்துக் கொண்டால், அதுவரை மனுதாரா் வெளிநாட்டில் வாங்கிய ஊதியத்தை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட நேரிடும். நீதிமன்றத்தால் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று நீதிபதி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com