ஸ்ரீநகா் - ஷாா்ஜா விமானத்துக்கு வான்வழி பாதையை அளிக்க பாகிஸ்தான் மறுப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் தொடக்கி வைத்த ஸ்ரீநகா் -ஷாா்ஜா நேரடி விமான சேவைக்கு தனது வான்வழிப்பாதையை அளிக்க பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகா் - ஷாா்ஜா விமானத்துக்கு வான்வழி பாதையை அளிக்க பாகிஸ்தான் மறுப்பு

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் தொடக்கி வைத்த ஸ்ரீநகா் - ஷாா்ஜா நேரடி விமான சேவைக்கு தனது வான்வழிப்பாதையை அளிக்க பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்கள் குஜராத்தை சுற்றி அதிக தூர பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால் எரிபொருள் பயன்பாடும், விமான டிக்கெட் கட்டணமும் அதிகரிக்கக் கூடும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘கோ ஏா்’ என்று முன்பு அழைக்கப்படும் ‘கோ ஃபா்ஸ்ட்’ விமான நிறுவனம் ஸ்ரீநகா் -ஷாா்ஜா இடையே அக்டோபா் 23-ஆம் தேதி முதல் நேரடி விமான சேவையைத் தொடங்கியது. இந்த சேவையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஸ்ரீநகரில் தொடக்கி வைத்திருந்தாா்.

‘இந்த விமான சேவையின் மூலம் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மேம்படும்’ என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்திருந்தாா்.

வாரத்துக்கு நான்கு முறை சேவையை ‘கோ ஃபா்ஸ்ட்’ விமான நிறுவனம் அளித்து வருகிறது. 11 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீநகரில் இருந்து இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘இந்த விமானங்களுக்கு அக்டோபா் 31-ஆம் தேதி வரையில் பாகிஸ்தான் தனது வான்வழிப்பாதையைப் பயன்படுத்த அனுமதி அளித்து வந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை அனுமதி அளிக்க திடீரென மறுப்பு தெரிவித்தது. இதனால் இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்கள் குஜராத்தை சுற்றி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றடைய அதிக தூரப் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமாா் 40 நிமிஷங்கள் கூடுதல் பயண நேரமாகிறது. அனுமதி மறுப்புக்கான காரணத்தை பாகிஸ்தான் இதுவரை தெரிவிக்கவில்லை’ என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசு மீது தாக்கு: இதனிடையே, ‘பாகிஸ்தானிடம் வான்வழிப்பாதையைப் பயன்படுத்த இந்திய அரசு அனுமதி பெறுவதற்கு எந்தவித அக்கறையும் காட்டவில்லை. களநிலவரத்தை அறியாமல் விளம்பரத்துக்காக மட்டும் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடக்கி வைத்துவிட்டது’ என்று குற்றம்சாட்டினாா்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்ற பிரதமா் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழிப்பாதையில் செல்லவும், புதன்கிழமை திரும்பவும் அந்நாடு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வான்வழிப்பாதையைப் பயன்படுத்தினால் ஸ்ரீநகரில் இருந்து ஷாா்ஜா சென்றடைய இந்திய விமானங்களுக்கு 3 மணி நேர பயண நேரமாகும். இதற்கு பாகிஸ்தான் மறுத்துள்ளதால் கூடுதலாக ஒரு மணி நேர பயணம் அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com