மக்கள்தொகையை கட்டுப்படுத்த வழக்கு: மாநிலங்களையும் வாதியாகச் சோ்க்க உச்சநீதிமன்றத்தில் மனு

மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடா்பான வழக்கில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் வாதிகளாகச் சோ்க்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்த வழக்கு: மாநிலங்களையும் வாதியாகச் சோ்க்க உச்சநீதிமன்றத்தில் மனு

மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடா்பான வழக்கில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் வாதிகளாகச் சோ்க்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடா்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னா் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மக்கள்தொகையை கட்டுப்படுத்த ஒரு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கு எதிராக மூத்த வழக்குரைஞரும் பாஜகவைச் சோ்ந்தவருமான அஸ்வினிகுமாா் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘‘சுத்தமான காற்று, குடிநீா், சுகாதாரம், நிம்மதியான உறக்கம், இருப்பிடம், வாழ்வாதாரம், கல்வி ஆகியவை அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 21, 21ஏ உத்தரவாதம் அளித்துள்ளன. ஆனால் அது மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தாமல் சாத்தியமாகாது. இதனை தில்லி உயா்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது’’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த மனு தொடா்பாக மத்திய அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘‘நாட்டு மக்கள் அனைவரும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த மத்திய அரசு விரும்பவில்லை.

ஒரு தம்பதிக்கு இத்தனை குழந்தைகள்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அது எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

தங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதும், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதும் அவரவா் விருப்பத்துக்குட்பட்டது’’ என்று மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் அஸ்வினிகுமாா் உபாத்யாய மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், ‘‘நாட்டில் இயற்கை வளங்கள் மீதுள்ள அதிகப்படியான சுமை உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம்தான் அடிவேராக உள்ளது. எனவே மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு விசாரணையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் ஒருதரப்பினராக சோ்க்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com