70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த பஞ்சாப் அரசு

கடந்த 70 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி இந்தளவு குறைக்கப்படுவது இதுவே முதல்முறை என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குறிப்பிட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த 3ஆம் தேதி, தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அந்தவகையில், பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இதைத்தொடர்ந்து அசாம், திரிபுரா, கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்பதாக அறிவித்தன. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி மேலும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை ரூ 10 மற்றும் டீசல் விலை ரூ 5 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி இந்தளவு குறைக்கப்படுவது இதுவே முதல்முறை என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குறிப்பிட்டார். மேலும், வட மாநிலங்களிலேயே பஞ்சாப் மாநிலத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளதாகவும் தலைநகர் தில்லியைக் காட்டிலும் பஞ்சாபில் பெட்ரோல் விலை 9 ரூபாய் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பஞ்சாபில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 96.16 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 84.80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களான தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com