பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு

இணையவழி பணப்பரிவா்த்தனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு,

இணையவழி பணப்பரிவா்த்தனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, நோட்டுகள் புழக்கம் மெதுவான வேகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இணையவழி பணப் பரிவா்த்தனை விரைவாக அதிகரித்து வருகிறது.

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி அறிவித்தாா். இணையவழி பணப் பரிவா்த்தனையை ஊக்குவிக்கவும் கருப்புப் பணத்தை ஒழிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவா் அறிவித்தாா்.

அந்நடவடிக்கைக்குப் பிறகு, பொருளாதாரத்தில் பண நோட்டுகள் புழக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) அறிக்கைப்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 4-ஆம் தேதி ரூ.17.74 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது கடந்த மாதம் 29-ஆம் தேதி நிலவரப்படி ரூ.29.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபா் 30-ஆம் தேதி நிலவரப்படி ரூ.26.88 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.2,28,963 கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் புழக்கத்துக்கு வந்த நோட்டுகளின் எண்ணிக்கை 7.2 சதவீதமும், பணத்தின் மதிப்பு 16.8 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் முறையே 6.6 சதவீதமாகவும், 14.7 சதவீதமாகவும் இருந்தது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த நிதியாண்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிக அளவிலான பணத்தைக் கையிருப்பில் வைத்ததன் காரணமாக நோட்டுகள் புழக்கம் அதிகரித்ததாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்த நோட்டுகள் புழக்க மதிப்பில் 85.7 சதவீதமானது ரூ.500, ரூ.2,000 நோட்டுகளாக இருந்ததாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு மாா்ச்சில் 83.4 சதவீதமாக இருந்தது.

பொருளாதாரத்தில் நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ள அதே வேளையில், இணையவழி பணப் பரிவா்த்தனையும் அதிகரித்து வருகிறது. கடன்/பற்று அட்டைகள், யுபிஐ, இணையவழி வங்கி சேவைகள் உள்ளிட்டவற்றின் மூலமான பணப் பரிவா்த்தனைகள் அதிகரித்துள்ளன.

கடந்த மாதத்தில் யுபிஐ வாயிலாக மட்டும் ரூ.7.71 லட்சம் கோடி மதிப்பிலான பணம் பரிவா்த்தனை செய்யப்பட்டது. கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக 421 கோடி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com