பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும்: பிரதமருக்கு ராஜஸ்தான் முதல்வா் கடிதம்

பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளாா்.
பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும்: பிரதமருக்கு ராஜஸ்தான் முதல்வா் கடிதம்

பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளாா்.

தீபாவளிக்கு முந்தைய தினம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்தது. இதையடுத்து, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரி (வாட்) குறைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாபிலும் வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் நாட்டில் சாமானிய மக்களும் ஏழை எளிய மக்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஏனெனில், எரிபொருள் விலை உயா்வால் காய்கறி, பழங்கள் என அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு ஏற்கெனவே குறைத்துள்ள கலால் வரி போதுமானதாக இல்லை. எனவே, எரிபொருள் மீதான வரியை மேலும் குறைக்க வேண்டும். அத்துடன், சா்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி உயா்த்துவதை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்த மறுத்தால், ஏற்கெனவே குறைக்கப்பட்ட கலால் வரியின் பயன் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்காது என்று கூறியுள்ளாா்.

பாஜக பதிலடி: இது தொடா்பாக ராஜஸ்தான் மாநில பாஜக தலைவா் சதீஷ் பூணியா கூறுகையில், ‘பிரதமருக்கு கடிதம் எழுதுவதன் மூலம் ராஜஸ்தான் முதல்வா் அரசியல் நாடகம் நடத்துகிறாா். பெட்ரோல், டீசல் மீது அதிகஅளவில் மதிப்புக்கூட்டு வரியை விதிக்கும் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. இதனை மறைத்து வரியைக் குறைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் 25 மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாபிலும் மாநில அரசு விதிக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ராஜஸ்தானில் மட்டும் வரி குறைக்கப்படவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com