முல்லைப் பெரியாறு: தமிழக அரசின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-உச்சநீதிமன்றத்தில் கேரளம் பதில்மனு

முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க அளவு பராமரிப்பு விவகாரம் தொடர்புடைய வழக்கில், கேரள அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு: தமிழக அரசின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-உச்சநீதிமன்றத்தில் கேரளம் பதில்மனு

முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க அளவு பராமரிப்பு விவகாரம் தொடர்புடைய வழக்கில், கேரள அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 அதில், நீர்மட்ட பராமரிப்பு அளவு தொடர்பாக தமிழக அரசின் தரப்பில் மேற்பார்வைக் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ள உயர்நிலை "ரூல் கர்வ்' நிர்ணய அளவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஜோ ஜோசப் என்பவரும், இந்த அணை ஒப்பந்த விவகாரம் தொடர்பாக சுரக்ஷô பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக "ரிட்' மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
 இந்த வழக்கை கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் "ரூல் கர்வ்' அறிவிக்கையின்படி தற்போதைக்கு அணையின் நீர்மட்ட அளவைப் பராமரிப்பதை தமிழக, கேரள மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் 11-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் கேரள அரசு நவம்பர் 8-ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
 இந்த நிலையில், கேரள அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. கேரள அரசின் நீர்ப்பாசனப் பிரிவு தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் தாக்கல் செய்துள்ள அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 முல்லைப் பெரியாறு அணையியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த மாதம் 16-ஆம் தேதியில் இருந்து பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக அணையில் தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், அந்த அணையின் கீழ்ப்பகுதியில் வாழும் மக்கள், கேரள அரசின் கவலை குறித்து உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த நிலையில், அணையில் நீர்மட்டத்தை அக்டோபர் 31-ஆம் தேதி 138 அடியாகப் பராமரிக்க வேண்டிய நிலையில், அன்று இரவு 11 மணியளவில் 138.55 அடியாகப் பராமரிக்கப்பட்டிருப்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயலாகும். மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கிவைக்கும் அளவு வரையறுக்கப்பட்டதாகும். கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்தே பல்வேறு தருணங்களில் திடீர் வெள்ளம் காரணமாக இதன் நீர் அளவில் திடீரென ஏற்றம் கண்டு வருகிறது.
 பருவமழைக் காலத்தின்போது தொடர்ந்து நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக அரசு மூலம் செப்டம்பர் 20-ஆம் தேதி தயாரிக்கப்பட்ட 142 அடியை நிர்ணயிக்கும் "அப்பர் ரூல் கர்வை' மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், அணையில் நீர்மட்டம் அதிக அளவில் வைக்கப்பட்டு, அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டால் ஏற்கெனவே நிரம்பிய நிலையில் உள்ள இடுக்கி அணையை அது பாதிக்கச் செய்துவிடும். மேலும், முல்லைப் பெரியாறு, இடுக்கி அணைகளில் அடுக்கடுக்கான பாதிப்பு ஏற்பட்டால், இடுக்கி அணையின் கீழ் வசிக்கக்கூடிய 50 லட்சம் மக்களின் உயிர், உடைமை ஆகியவற்றுக்கு கற்பனை செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
 இதனால், தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக் கவலைகள் காரணமாக உள்ள வெளிப்புற அச்சத்தை நீக்கவும், முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப் பகுதியில் வாழக்கூடிய லட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்கவும் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப் பகுதியில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com