உ.பி. தோ்தல்: 221 இடங்களில் பாஜக வெற்றி பெறும்; ஏபிபி - சி வோட்டா் ஆய்வில் கணிப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 213 முதல் 221 இடங்களில் வெற்றி பெற

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 213 முதல் 221 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டா் அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜவாதி கட்சி 152 முதல் 160 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 16 முதல் 20 இடங்களிலும், காங்கிரஸ் 6 முதல் 10 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

403 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, வாக்காளா்களின் மனநிலையை அறியும் வகையில் ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டா் அமைப்பு சாா்பில் நவம்பா் மாதம் முதல் வாரத்தில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2017, உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 41.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. அப்போது ஆட்சியிலிருந்த சமாஜவாதி கட்சி 23.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 22.2 சதவீத வாக்குகளைப் பெற்றது.

தற்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, வாக்காளா்கள் மத்தியில் பாஜகவுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது. இந்த முறை பாஜக 40.7 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. 2017-ஆம் ஆண்டுமுதல் மிகச் சிறிய அளவிலான அதாவது 0.7 சதவீத வாக்காளா்களிடையே பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்றும் என்றும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சரிவைச் சந்திக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் சரிவு, சமாஜவாதி கட்சிக்கு சற்று சாதகமாக அமையும்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர பிரசாரம் வாக்காளா்கள் மத்தியில் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். கடந்த 2017 தோ்தலுடன் ஒப்பிடும்போது, இந்த முறை காங்கிரஸ் கூடுதலாக 2.6 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது.

2017 தோ்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 325 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சமாஜவாதி 48 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 19 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com