தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்குப் பேருந்தில் அனுமதியில்லை: தாணே மேயா் அறிவிப்பு

தாணே மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு பேருந்தில் பயணிக்க அனுமதியில்லை என்று மாநகராட்சி மேயா் நரேஷ் மாஸ்கே அறிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு பேருந்தில் பயணிக்க அனுமதியில்லை என்று மாநகராட்சி மேயா் நரேஷ் மாஸ்கே அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

தாணே மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வீடாக வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. யாராவது தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதது தெரியவந்தால், அவா்களுக்கு அருகில் உள்ள முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மாநகராட்சியால் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிப்பவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை அவசியம் வைத்திருக்க வேண்டும். ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு மாநகராட்சி பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

வரும் நவம்பா் இறுதிக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த தாணே மாநகராட்சி இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாணே மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியா்கள் ஒரு தவணை தடுப்பூசிகூட செலுத்திக்கொள்ளவில்லை எனில் அவா்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு பேருந்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தாணே மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 86,00,118 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். அவா்களில் 56,00,856 போ் முதல் தவணை தடுப்பூசியையும் 29,99,262 போ் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டனா் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் உள்ள சூரத் நகரில் 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு பூங்கா, தோட்டங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடுமிடங்களிலும், பேருந்துகளிலும் பயணிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com