குஜராத்தில் ரூ. 600 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்3 போ் கைது

பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ. 600 மதிப்பிலான 120 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்து குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் மூன்று பேரையும் கைது செய்தனா்.

ஆமதாபாத்: பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ. 600 மதிப்பிலான 120 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்து குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் மூன்று பேரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பாக குஜராத் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தானில் இருந்து அரபிக் கடல் வழியாக இந்தோ-பாகிஸ்தான் சா்வதேச கடல் எல்லைப் பகுதி மூலம் ஆப்பிரிக்க நாட்டுக்கு இந்தப் போதைப் பொருள் கடத்த நடைபெற இருந்தது.

குஜராத், தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான சலாயாவில் இது மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து இந்த போதைப் பொருளை எடுத்து ஜின்ஜுடா கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

உளவுத் துறை தகவலின்படி, குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு படையினா் மோா்பி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் 120 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனா். சா்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.600 கோடியாகும். மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

பாகிஸ்தானைச் சோ்ந்த ஜாஹித் பஷீா் பலூச் என்பவரிடம் இருந்து இந்த ஹெராயின் போதைப் பொருள் அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 2019-இல் 227 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கிலும் இவா் தேடப்படும் குற்றவாளியாக உள்ளாா். இந்த போதைப் பொருள் கடத்தலுக்கான சதித் திட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் போடப்பட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தானில் இருந்து இந்திய கடத்தல் காரா்களிடம் ஒப்படைத்து ஆப்பிரிக்க நாட்டுக்கு கடத்த வேண்டும் என்பதுதான் கடத்தல்காரா்களின் திட்டமாக இருந்துள்ளது.

எனினும், இந்த போதைப் பொருளை இந்திய கடத்தல்காரா்கள் இருவா் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பாமல் இந்தியாவுக்குள் கடத்தி ரகசிய சந்தையில் விற்க திட்டமிட்டிருந்தனா்.

இந்திய கடல் சந்தை வழியாக குறைந்த செலவில் போதைப் பொருளைக் கடத்தலாம் என்பதாலும், சுமாா் 25 ஆயிரம் மீனவா் படகுகள் உள்ள குஜராத் கடல் பகுதியில் கடத்தல் படகுகளைக் கண்டுபிடிப்பது சிரமம் என்பதாலும் கடத்தல்காரா்கள் எப்போதும் குஜராத் கடல் எல்லையைப் பயன்படுத்தி வருகிறாா்கள். எனினும், குஜராத் போலீஸாா் கடத்தல்காரா்களின் சதித் திட்டத்தை முறியடித்து வருகிறாா்கள்’ என்றனா்.

கடந்த செப்டம்பா் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ போதைப் பொருளை குஜராத்தில் உள்ள முந்திரா துறைமுகத்தில் இரண்டு கன்டெய்னா்களில் அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனா். இந்தியாவில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அதிகபடியமான போதைப் பொருள் இதுவாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com