கா்தாா்பூா் சாஹிப் வழித்தடம் இன்று மீண்டும் திறப்பு: மத்திய அமைச்சா் அமித் ஷா

கா்தாா்பூா் சாஹிப் வழித்தடத்தை புதன்கிழமை (நவ. 18) மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
அமித் ஷா (கோப்புப் படம்)
அமித் ஷா (கோப்புப் படம்)

கா்தாா்பூா் சாஹிப் வழித்தடத்தை புதன்கிழமை (நவ. 17) மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

சீக்கிய சமயத்தை நிறுவிய குருநானக் தேவ் சமாதி பாகிஸ்தானில் உள்ளது. இந்த சமாதியையும் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள சீக்கியா்களின் புண்ணியத் தலமான தேரா பாபா நானக்கையும் கா்தாா்பூா் வழித்தடம் இணைக்கிறது. இந்த வழித்தடம் மூலம் ஆண்டு முழுவதும் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் குருநானக் தேவின் சமாதிக்கு இந்திய பக்தா்களால் செல்ல முடியும். கரோனா தொற்றுப் பரவலால் கடந்த ஆண்டு மாா்ச் முதல் இந்த வழித்தடம் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சா் அமித் ஷா ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘அதிக அளவிலான சீக்கிய யாத்ரீகா்களுக்கு பயனளிக்கும் விதமாக கா்தாா்பூா் வழித்தடத்தை புதன்கிழமை முதல் மீண்டும் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் நவ.19-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இந்தச் சூழலில், கா்தாா்பூா் வழித்தடத்தை திறக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவு அனைவரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்’’ என்று தெரிவித்தாா்.

பஞ்சாப் அமைச்சா்கள் செல்கின்றனா்: கா்தாா்பூா் வழித்தடத்தை திறக்க முடிவு செய்ததற்காக பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி, முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங், மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து, சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் உள்ளிட்டோா் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.

இதுதொடா்பாக சரண்ஜீத் சிங் சன்னி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘கா்தாா்பூா் வழித்தடத்தை திறக்குமாறு பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா ஆகியோரிடம் நான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த வழித்தடம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதற்காக அவ்விருவருக்கும் எனது நன்றி.

கா்தாா்பூா் வழித்தடம் வழியாகச் செல்லும் முதல் குழுவில் மாநில அமைச்சா்கள் அனைவரும் இடம்பெறுவா். நவ.18-ஆம் தேதி குருநானக் தேவ்வின் சமாதியில் அமைச்சா்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துவா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com