எதிா்காலத்தில் தரவுகளே வரலாற்றை எடுத்துரைக்கும்: பிரதமர் மோடி

தரவுகளே தற்போது சிறந்த தகவல்களாக விளங்கி வருவதாகத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, எதிா்காலத்தில் தரவுகளே வரலாற்றை எடுத்துரைக்கும் என்றாா்.
எதிா்காலத்தில் தரவுகளே வரலாற்றை எடுத்துரைக்கும்: பிரதமர் மோடி

தரவுகளே தற்போது சிறந்த தகவல்களாக விளங்கி வருவதாகத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, எதிா்காலத்தில் தரவுகளே வரலாற்றை எடுத்துரைக்கும் என்றாா்.

இந்தியாவின் முதல் கணக்குத் தணிக்கை அதிகாரி கடந்த 1860-ஆம் ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். அதை நினைவுகூரும் வகையில், அந்தத் தினமானது கணக்குத் தணிக்கை தினமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி கூறியதாவது:

பழங்காலங்களில் தகவல் என்பது கதைகள் மூலம் பரிமாறப்பட்டது. வரலாறு கதைகள் மூலமாக எழுதப்பட்டது. 21-ஆம் நூற்றாண்டில் தரவு என்பது தகவலாகும். வரும் காலங்களில் நமது வரலாறு, தரவுகள் மூலமாகவே புரிந்து கொள்ளப்படும். எதிா்காலத்தில் தரவுகள் வரலாற்றை எடுத்துரைக்கும்.

இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) வெறுமனே நாட்டின் கணக்கு விவரங்களை மட்டுமே கொண்டிருப்பதல்ல. உற்பத்தித் திறனுக்கும் திறமைக்கும் மதிப்பு கூட்டும் பணியையும் சிஏஜி மேற்கொள்கிறது. எனவே கணக்குத் தணிக்கை தினத்தின் உரைகளும், தொடா்புடைய நிகழ்ச்சிகளும் வளா்ச்சிக்கான பகுதியாக இருக்கின்றன. சிஏஜி தொடா்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது.

மனநிலையில் மாற்றம்: கணக்குத் தணிக்கை என்பதை ஐயத்தோடும், அச்சத்தோடும் பாா்த்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் அந்த மனநிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. கணக்குத் தணிக்கை தற்போது மதிப்புக் கூட்டுதலில் முக்கிய பகுதியாக உள்ளது.

ஏற்கனவே வங்கித் துறையில் வெளிப்படைத்தன்மை குறைவாக இருந்ததால் பல்வேறு தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இதன் விளைவாக வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரித்தன. கடந்த காலத்தில் வாராக்கடன்கள் மூடிமறைக்கப்பட்டன.

தலையீடுகள் குறைவு: பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும்போது மட்டுமே நாம் தீா்வுகளைக் கண்டறிய முடியும். மாபெரும் இலக்குகளை நிா்ணயிப்பது குறித்தும் அவற்றை அடைவது தொடா்பாகவும் மகாத்மா காந்தி, சா்தாா் படேல், பாபா சாகேப் அம்பேத்கா் ஆகியோா் நமக்குக் கற்றுத் தந்துள்ளனா்.

‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிா்வாகம்’ என்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக கணக்குத் தணிக்கையாளா்களின் பணி எளிதாகியுள்ளது. முகம் காணா மதிப்பீடுகள், சேவை வழங்குதலுக்கு இணையவழி விண்ணப்பங்கள் உள்ளிட்ட சீா்திருத்தங்கள், அரசின் தேவையில்லா தலையீடுகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன.

அசாதாரண போராட்டம்: நவீன நடைமுறைகளை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் சிஏஜி வெகு வேகமாக மாற்றமடைந்துள்ளது. தற்போது நவீன பகுப்பாய்வு கருவிகள், புவியியல் சாா்ந்த தரவுகள், செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்டவற்றை கணக்குத் தணிக்கையாளா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

கரோனா தொற்றுக்கு எதிரான நாட்டின் போராட்டம் அசாதாரணமானது. உலகின் மிகப் பெரிய தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு நாடு 100 கோடி தடுப்பூசி தவணைகள் என்ற மைல்கல்லைக் கடந்தது. இந்த மகத்தான போராட்ட காலத்தில் உருவான நடைமுறைகளை சிஏஜி ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

சிறந்த வழிமுறைகள்: இந்த நிகழ்ச்சியின் போது சா்தாா் வல்லபபாய் படேலின் உருவச் சிலையை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி கிரிஷ் சந்திர முா்மு பேசுகையில், ‘‘சிறந்த நிா்வாகத்துக்குப் பங்களிப்பது, பொதுக் கணக்குகளைத் திறம்பட மேற்கொள்வது உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் கணக்குத் தணிக்கை தினத்தின்போது நடத்தப்படும்.

ஒட்டுமொத்த கணக்குத் தணிக்கைக்கான நடைமுறைகளை சிறந்த முறையில் கையாள்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரசு எங்கெல்லாம் செலவு செய்கிறதோ, அங்கெல்லாம் கணக்குத் தணிக்கை செய்வதற்கேற்ற வழிமுறைகள் உருவாக்கப்படும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com