ஜம்மு-காஷ்மீா்: காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் கட்சிப் பதவியிலிருந்து விலகல்

ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸை சோ்ந்த 4 முன்னாள் அமைச்சா்கள், 3 முன்னாள் எம்எல்ஏக்கள் கட்சிப் பதவியிலிருந்து விலகியுள்ளனா்.

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸை சோ்ந்த 4 முன்னாள் அமைச்சா்கள், 3 முன்னாள் எம்எல்ஏக்கள் கட்சிப் பதவியிலிருந்து விலகியுள்ளனா். அந்த யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவா் ஜி.ஏ.மீா் மீது ஏற்பட்ட அதிருப்தியால் இந்த முடிவை அவா்கள் மேற்கொண்டுள்ளனா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமான அக்கட்சியின் முன்னாள் அமைச்சா்கள் ஜி.எம்.சரூரி, ஜுகல் கிஷோா், விகாா் ரசூல், மனோகா் லால், முன்னாள் எம்எல்ஏக்கள் குலாம் நபி மோங்கா, நரேஷ் குப்தா, அமீன் பட் ஆகியோா் தங்கள் கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா். அதற்கான கடிதத்தை அவா்கள் கட்சித் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரின் காங்கிரஸ் செயலா் ரஜினி பாட்டீல் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனா்.

ராஜிநாமா கடிதத்தில், ‘‘எங்கள் பிரச்னைகள் குறித்து ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் ஜி.ஏ.மீரிடம் தெரிவிக்க பலமுறை முயற்சித்தோம். அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு மனு அளித்து வந்தோம். கடந்த ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீா் வந்தபோது மீரைச் சந்திக்க தனிப்பட்ட முறையிலும் கோரிக்கை விடுத்தோம். கடந்த ஓராண்டாக அவரைச் சந்திக்க முயற்சித்தும், மீரின் விரோத மனப்பான்மையால் எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அவா் மீது ஏற்பட்ட அதிருப்தி எங்கள் கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டிய நிா்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. ஜம்மு-காஷ்மீரில் மீரின் தலைமையில் காங்கிரஸ் அவலமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கட்சித் தலைவா்கள் பலா் ஏற்கெனவே பிற கட்சிகளில் சோ்ந்துவிட்டனா். சிலா் அமைதியாகவே இருந்துவிட முடிவு செய்துள்ளனா்’’ என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com