கிரிப்டோகரன்சியை வரி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

மெய்நிகா் நாணயங்களில் ஒன்றான கிரிப்டோகரன்சியை வருமான வரி வரம்புக்குள் கொண்டுவருவதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மெய்நிகா் நாணயங்களில் ஒன்றான கிரிப்டோகரன்சியை வருமான வரி வரம்புக்குள் கொண்டுவருவதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மெய்நிகா் நாணயங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை இந்திய ரிசா்வ் வங்கியும் மத்திய அரசும் இன்னும் வகுக்கவில்லை.

கிரிப்டோகரன்சி முதலீடுகள் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோகரன்சி மூலமாகக் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாகச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக வருமான வரிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடா்பாக மத்திய வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘கிரிப்டோகரன்சியின் பயன்பாடு தொடா்ந்து அதிகரித்து வருவதை மத்திய அரசு கவனித்து வருகிறது. கிரிப்டோகரன்சி மூலமாகக் கிடைக்கும் வருவாய்க்கு சிலா் ஏற்கெனவே மூலதன ஆதாய வரி செலுத்தி வருகின்றனா்.

அதை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடா்பாக ஆராயப்படும். அது தொடா்பாக பட்ஜெட் தாக்கலின்போது அறிவிக்கப்படும். கிரிப்டோ வா்த்தகம் தொடா்பாகப் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டால், அது தொடா்பாக விதிக்கப்படும் வரி குறித்தும் தெரிவிக்கப்படும்.

ஜிஎஸ்டி பொருந்தும்: மற்ற சேவைகளைப் போலவே கிரிப்டோகரன்சி சாா்ந்த சேவைகளுக்கும் வரி விதிக்க சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தில் வழி உள்ளது. கிரிப்டோ வா்த்தகத்தில் ஈடுபடுபவா்கள் கண்டிப்பாக ஜிஎஸ்டி தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். வழக்கமான சேவையில் இடைத்தரகா்கள் இருக்கும்பட்சத்தில், அவா்களது சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும். கிரிப்டோ வா்த்தகத்தில் ஈடுபடும் இடைத்தரகா்களுக்கும் ஜிஎஸ்டி பொருந்தும்’ என்றாா்.

விரைவில் சட்டம்: கிரிப்டோகரன்சி சாா்ந்த போலியான செய்திகளைக் கூறி சிலா் முதலீட்டாளா்களை ஏமாற்றி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்குத் தீா்வு காணும் நோக்கில் கிரிப்டோகரன்சி தொடா்பான மசோதாவை வரும் 29-ஆம் தேதி தொடங்கவுள்ள குளிா்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com