பொறுப்பற்ற நாடு சீனா: அமைச்சர் ராஜ்நாத் சிங்

கடல் சட்டம் தொடர்பாக கடந்த 1982-இல் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானத்தின் விளக்கத்தை திரித்துக் கூற சில பொறுப்பற்ற நாடுகள் முயற்சிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
மும்பையில் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு நினைவுப் பரிசு வழங்கிய கடற்படை தலைமைத் தளபதி கரம்வீர் சிங்.
மும்பையில் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு நினைவுப் பரிசு வழங்கிய கடற்படை தலைமைத் தளபதி கரம்வீர் சிங்.

கடல் சட்டம் தொடர்பாக கடந்த 1982-இல் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானத்தின் விளக்கத்தை திரித்துக் கூற சில பொறுப்பற்ற நாடுகள் முயற்சிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். இதன்மூலம் சீனாவை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கக் கூடிய "ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்' என்ற போர்க் கப்பலை இந்தியக் கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சியில் அவர் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். "தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தப் போர்க் கப்பல் முழுமையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதாகும்.
நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் விளக்கத்தை திரித்துக் கூற சில பொறுப்பற்ற நாடுகள் முயற்சிக்கின்றன. தங்களின் குறுகிய சுயநலத்துக்காக அவை இவ்வாறு செய்து அத்தீர்மானத்தைப் பலவீனப்படுத்துகின்றன.
ஒரு பொறுப்பான கடல்சார் நாடு என்ற முறையில் இந்தியா நிலையான கடல்சார் சட்டங்களையும் கருத்தொற்றுமை அடிப்படையிலான கொள்கைகளையும் ஆதரிக்கிறது.
கடல் போக்குவரத்து சுதந்திரம், தாராள வர்த்தகம் உள்ளிட்ட விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ- பசிபிக் பிராந்தியம் என்பதே இந்தியாவின் லட்சியமாகும்.
கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. தீர்மானம், கடல் எல்லையையும் பொருளாதார மண்டலத்தையும் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
அதைத் திரித்துக் கூறுவது விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட கடல்சார் ஒழுங்குமுறையில் தடங்கல்களை ஏற்படுத்துகிறது. சில பொறுப்பற்ற நாடுகள் (சீனா) கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் விளக்கத்தை திரித்துக் கூற முயற்சிக்கின்றன.
ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முக்கியமானதாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் சரக்குப் போக்குவரத்தும், மூன்றில் ஒரு பங்கு சரக்குப் போக்குவரத்தும், பாதிக்கும் மேற்பட்ட கன்டெய்னர் போக்குவரத்தும் இந்தப் பிராந்தியம் வழியாகவே நிகழ்கின்றன.
இந்தப் பிராந்தியத்தில் முக்கிய நாடு என்ற முறையில் இந்தப் பகுதியின் பாதுகாப்புக்கு இந்திய கடற்படை முக்கியப் பங்காற்றுகிறது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை தாராளமானதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது இந்தியக் கடற்படையின் முக்கிய நோக்கமாகும்.
இந்தியப் பெருங்கடலுடன் இந்தியாவின் நலன்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரத்துக்கு இந்தப் பிராந்தியம் மிகவும் முக்கியமானதாகும்.
பயங்கரவாதம், ஆயுதங்களையும் போதைப் பொருள்களையும் சட்டவிரோதமாக கடத்துவது, ஆள்கடத்தல், சட்ட விரோதமாக மீன்பிடிப்பது, சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுத்துவது போன்ற சவால்கள், கடல்சார் பாதுகாப்பை பாதிக்கின்றன. எனவே, ஒட்டுமொத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் இந்திய கடற்படையின் பங்கு மிக முக்கியமானதாகிறது என்றார்.
தென்சீனக் கடலில் உள்ள தீவுகளில் ராணுவ பலத்தைப் பெருக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதை உலக நாடுகள் விமர்சித்துள்ளன. தென்சீனக் கடலின் பெரும் பகுதி தங்களுடையதுதான் என சீனா உரிமை கோரி வருகிறது. இதை ஒரு சர்வதேசத் தீர்ப்பாயம் கடந்த 2016-இல் நிராகரித்தது. எனினும் அத்தீர்ப்பு செல்லாது என்றும், அது தங்கள் நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும் சீனா கூறியது. சீனாவின் ஆதிக்க முயற்சிகள் அதிகரித்து வரும் சூழலில் அந்நாட்டை பெயர் குறிப்பிடாமல் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

"ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்' போர்க் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் தேடலுக்கு இன்று பெருமைக்குரிய நாள்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தப் போர்க் கப்பல் நமது பாதுகாப்பை வலுப்படுத்தும்.
- பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com