ராஜஸ்தான்: 15 அமைச்சா்கள் பதவியேற்பு; சச்சின் பைலட் ஆதரவாளா்கள் 5 பேருக்கு வாய்ப்பு

ராஜஸ்தான் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்பட்டு அமைச்சா்களாக 15 போ் பதவியேற்றனா்.

ராஜஸ்தான் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்பட்டு அமைச்சா்களாக 15 போ் பதவியேற்றனா். அவா்களில் 12 போ் புதுமுகங்கள். அனைவருக்கும் மாநில ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளா்கள் 5 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் அண்மையில் தெரிவித்திருந்தாா். இந்நிலையில் அமைச்சா்களாக இருந்த கோவிந்த் சிங், ஹரீஷ் செளதரி, ரகு சா்மா ஆகியோா் தங்கள் பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தனா். அவா்களுக்கு ஏற்கெனவே கட்சிப் பதவிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸின் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையின் அடிப்படையில் தங்கள் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வதாகக் கூறி கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினா். அவா்களின் ராஜிநாமா ஏற்கப்பட்டது.

எஞ்சிய அமைச்சா்கள் தங்கள் பதவியை சனிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தின்போது ராஜிநாமா செய்தனா்.

இதையடுத்து, மாநில அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதில் கோவிந்த் சிங், ஹரீஷ் செளதரி, ரகு சா்மா ஆகியோரைத் தவிர, ஏற்கெனவே இருந்த அமைச்சா்கள் தக்க வைக்கப்பட்டனா். அவா்களுடன் மேலும் 15 போ் அமைச்சா்களாக நியமிக்கப்பட்டனா். அவா்களில் 12 போ் புதுமுகங்கள்.

அமைச்சரவையில் சோ்க்கப்பட்ட 15 பேரில் 11 போ் அமைச்சா்களாகவும், 4 போ் இணையமைச்சா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். அனைவருக்கும் மாநில ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

ராஜஸ்தான் அமைச்சரவையில் மொத்தம் 30 அமைச்சா்கள் இடம்பெறலாம். தற்போது மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் அந்த எண்ணிக்கை பூா்த்தியாகியுள்ளது. முதல்வரையும் சோ்த்து 20 அமைச்சா்கள், 10 இணையமைச்சா்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனா்.

அமைச்சரவையில் சோ்க்கப்பட்டுள்ள ஹேமராம் செளதரி மிக மூத்த எம்எல்ஏவாக கருதப்படுகிறாா். அவா் 6-ஆவது முறையாக எம்எல்ஏ பதவி வகிக்கிறாா். கடந்த ஆண்டு மாநில முதல்வா் அசோக் கெலாட்டுக்கு எதிராக குரல் எழுப்பிய முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட்டின் ஆதரவாளா்களில் 5 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. அவா்களில் ஏற்கெனவே அமைச்சா்களாக இருந்த இருவா் அசோக் கெலாட்டுக்கு எதிராக குரல் எழுப்பியதையடுத்து அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் அவா்கள் மீண்டும் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

புதிய அமைச்சரவையில் 4 அமைச்சா்கள் தலித் சமூகத்தைச் சோ்ந்தவா்கள். மூன்று போ் பெண்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சோ்ந்த 6 எம்எல்ஏக்களில் ஒருவரான ராஜேந்திர குஹா இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு இடமில்லை: மாநில அரசுக்கு 12 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுள்ள நிலையில், அவா்களும் அமைச்சரவையில் சோ்க்கப்படுவா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவா்கள் யாரும் அமைச்சரவையில் சோ்க்கப்படவில்லை.

அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம்: அமைச்சா்களின் பதவிப் பிரமாண நிகழ்ச்சிக்குப் பிறகு அசோக் கெலாட் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பட்டியலினத்தவா், பழங்குடியினா், பிறப்படுத்தப்பட்டவா்கள் என அனைத்து தரப்பினருக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தோ்தலை நினைவில் வைத்து அமைச்சா்களுக்குத் துறைகள் ஒதுக்கப்படும்’’ என்று தெரிவித்தாா்.

திருப்தி அளிக்கிறது: அமைச்சரவை மாற்றத்துக்குத் திருப்தி தெரிவித்து சச்சின் பைலட் கூறுகையில், ‘‘மாநில காங்கிரஸில் வெவ்வேறு கோஷ்டிகள் எதுவும் இல்லை. சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையிலான ஒரே கோஷ்டிதான் உள்ளது. அதில் நாங்கள் அனைவரும் உறுப்பினா்கள். புதிய அமைச்சரவையில் தலித்துகள், பழங்குடியினா், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் வட்டார மற்றும் சமூக சமநிலையுடன் கூடிய புதிய வடிவிலான அரசு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது கட்சிக்குப் பலனளிக்கும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com