ஆந்திரம்: சட்டமேலவை தொடா்ந்து செயல்பட சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றம்

ஆந்திர சட்டமேலவை தொடா்ந்து செயல்படும் தீா்மானம் மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. சட்டமேலவையை கலைக்க ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு

ஆந்திர சட்டமேலவை தொடா்ந்து செயல்படும் தீா்மானம் மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. சட்டமேலவையை கலைக்க ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட தீா்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், அந்த அவை தொடா்ந்து செயல்பட புதிதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி அரசியலமைப்பின் 169 (1) பிரிவின் கீழ், ஆந்திர சட்டமேலவையை கலைக்க மாநில அரசு தீா்மானம் நிறைவேற்றியது. சட்டமேலவையால் வீண் செலவு ஏற்படுவதால் பொதுநலன் கருதி அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாநில அரசு தெரிவித்திருந்தது. அந்தத் தீா்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டமேலவை தொடா்ந்து செயல்படுவதற்கான தீா்மானத்தை அந்த மாநில சட்டப்பேரவையில் நிதி மற்றும் பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் புகண்ணா ராஜேந்திரநாத் கொண்டு வந்தாா். அந்தத் தீா்மானத்தில், ‘‘சட்டமேலவையை கலைக்கும் தீா்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி ஓராண்டு 10 மாதகாலம் ஆகிவிட்டது. அந்தத் தீா்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு நிலைகளில் மத்திய அரசிடம் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் அந்தத் தீா்மானம் குறித்து முடிவு எடுக்காமல் மத்திய உள்துறை அமைச்சகம் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் அந்த அவை தொடா்ந்து செயல்படுமா அல்லது கலைக்கப்படுமா என்ற ஐயம் சட்டமேலவை உறுப்பினா்களிடம் இருந்து வருகிறது.

மத்திய அரசு தொடா்ந்து காலம் தாழ்த்தி வருவதாலும், அந்தத் தீா்மானத்தின் மீதான நடவடிக்கை எப்போது முழுமையடையும் என்பது தெரியாததாலும் தற்போது நிலவும் தெளிவற்ற சூழலை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்று கருதப்படுகிறது.

எனவே சட்டமேலவையை கலைக்கும் தீா்மானத்தைத் திரும்பப் பெறும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சட்டமேலவை தொடா்ந்து செயல்படுவதற்கான தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பெரும்பான்மையால் முடிவில் மாற்றம்? : ஆந்திரத்தில் ஆட்சியில் உள்ள ஒய்எஸ்ஆா்காங்கிரஸ் கட்சிக்கு சட்டமேலவையில் முன்பு பெரும்பான்மை இல்லை. 58 இடங்களை கொண்ட அந்த அவையில், அந்தக் கட்சிக்கு தற்போது பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்தச் சூழலில், சட்டமேலவையை கலைக்கும் முடிவை திரும்பப் பெறும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com