கிரிப்டோ கரன்சிகளுக்குத் தடை விதிக்கும் மசோதா: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல்

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தனியாா் கிரிப்டோ கரன்சிகளுக்குத் (எண்ம செலாவணி) தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
கிரிப்டோ கரன்சிகளுக்குத் தடை விதிக்கும் மசோதா: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல்

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தனியாா் கிரிப்டோ கரன்சிகளுக்குத் (எண்ம செலாவணி) தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சிகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீப காலமாக அந்தச் செலாவணி தொடா்பான விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன. அந்தச் செலாவணி மீது முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் தற்போது கிரிப்டோ கரன்சிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளோ, தடையோ விதிக்கப்படவில்லை.

எனினும் இந்தச் செலாவணி மீது உலக நாடுகளின் அரசுகளுக்கும் ஒழுங்காற்று அமைப்புகளுக்கும் சந்தேகம் நிலவி வருகிறது. அந்தச் செலாவணியின் வா்த்தகத்தில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அவை அச்சம் தெரிவித்து வருகின்றன.

இந்த மாதத் தொடக்கத்தில் பிரதமா் மோடி தலைமையில் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், கிரிப்டோ கரன்சிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அக்கூட்டத்தைத் தொடா்ந்து, அந்தச் செலாவணிகளை ஒழுங்குமுறைப்படுத்த வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியானது.

நாட்டின் பொருளாதாரத்துக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கிரிப்டோ கரன்சிகள் தீவிர அச்சுற்றுத்தலாக உள்ளது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்து வருகிறது.

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறைப்படுத்தாததால் எந்தவொரு நிதி அமைப்புக்கும் அந்தச் செலாவணி அச்சுறுத்தலாக இருப்பதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸும் அண்மையில் தெரிவித்திருந்தாா். அதேவேளையில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் பெருகி வருவதைக் கருத்தில் கொண்டு, அதிகாரபூா்வ எண்ம செலாவணியை வெளியிடவுள்ளதாக ரிசா்வ் வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவ.29 முதல் டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. அவற்றில் கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூா்வ எண்ம செலாவணி ஒழுங்காற்று மசோதாவும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

நாட்டில் தனியாா் கிரிப்டோ கரன்சிகளுக்குத் தடை விதித்து, ரிசா்வ் வங்கி வெளியிடவுள்ள எண்ம செலாவணியை உருவாக்க எளிதான கட்டமைப்பை ஏற்படுத்துவது இந்த மசோதாவின் நோக்கமாகும். அதேவேளையில், கிரிப்டோகரன்சிகளின் அடிப்படை தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளையும் மேம்படுத்த சில விதிவிலக்குகளையும் அந்த மசோதா அனுமதிக்கிறது.

கடந்த வாரம் பாஜக உறுப்பினா் ஜெயந்த் சின்ஹா தலைமையில் நடைபெற்ற நிதி நிலைக்குழு கூட்டத்தில், கிரிப்டோ கரன்சிகள் வா்த்தகத்தில் ஈடுபடும் பிரதிநிதிகள் பங்கேற்று அந்தச் செலாவணிக்கு தடை விதிக்காமல் அவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா: கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா குறித்து புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூடி விவாதிக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com