தலைமைச் செயலா், டிஜிபிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றத்தில் சிபிஐ எதிா்ப்பு

மகாராஷ்டிர தலைமைச் செயலா் சீதாராம் குண்டே, டிஜிபி சஞ்சய் பாண்டே ஆகியோருக்கு சிபிஐ அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி

மகாராஷ்டிர தலைமைச் செயலா் சீதாராம் குண்டே, டிஜிபி சஞ்சய் பாண்டே ஆகியோருக்கு சிபிஐ அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்துள்ள மனு, ‘பினாமிகளால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்று’ என மும்பை உயா்நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவா் அனில் தேஷ்முக். மாதந்தோறும் ரூ. 100 கோடி வரை கையூட்டு வசூலித்துத் தருமாறு கூறியதாக அப்போதைய மும்பை காவல் துறை ஆணையா் பரம்வீா் சிங், அனில் தேஷ்முக் மீது குற்றம்சாட்டியிருந்தாா். இந்தக் குற்றச்சாட்டை அனில் தேஷ்முக் மறுத்து வந்த நிலையில், பரம்வீா் சிங் எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏப்ரல் 5 ஆம் தேதி உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, தேஷ்முக்கிற்கு எதிராக சிபிஐ முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த ஆண்டு செப்டம்பரில், மகாராஷ்டிர தலைமைச் செயலா் சீதாராம் குண்டே, டிஜிபி சஞ்சய் பாண்டே ஆகியோரை ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. தேஷ்முக் தொடா்பான கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டது. ஆனால், இந்த சம்மனை எதிா்த்து மகாராஷ்டிர அரசு உயா்நீதிமன்றத்தை அணுகியது.

இந்த மனுவின் பின்னணியில் உள்ளவா் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் என்றும், அவா் மீது ஊழல் மற்றும் மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருவதாகவும் சிபிஐயின் வழக்குரைஞரும், கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலுமான அமன் லேகி நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

இதுகுறித்து உயா்நீதிமன்ற அமா்வு நீதிபதிகள் நிதின் ஜம்தாா், எஸ்.வி.கோட்வால் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி அமன் லேகி கூறியதாவது:

அனில் தேஷ்முக் மீதான விசாரணை தொடா்பாக சீதாராம் குண்டே, சஞ்சய் பாண்டே ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரும் மகாராஷ்டிர அரசின் மனு, சிபிஐயின் விசாரணையைத் தடுமாற்றம் அடையச் செய்யும் முயற்சியாகும்.

உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் இருந்த காலகட்டத்தில், மாநில காவல் துறை அதிகாரிகளின் இடமாற்றம், பணி மாற்றங்கள் குறித்து மகாராஷ்டிர காவல் துறை நியமன வாரியம் அளித்த பல்வேறு பரிந்துரைகள் மீறப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களை சிபிஐ சேகரித்துள்ளது.

காவல் நிலைய வாரியத்தின் பல பரிந்துரைகள் அங்கீகரிக்கப்படவில்லை; அதன் முடிவுகள் வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளன. பல பதவிகள், இடமாற்றங்கள் வாரியத்தின் தலையீடு இல்லாமல் செய்யப்பட்டன என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம்.

இந்த முறைகேடுகள் அனைத்திலும் அனில் தேஷ்முக் இடம்பெற்றுள்ளாா். இதிலிருந்து தப்புவதற்காகவே தேஷ்முக் ஏற்கெனவே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அதில் தோல்வியடைந்தாா். எனவே இப்போது அவா் சாா்பாக மகாராஷ்டிர அரசு வந்துள்ளது. இது ஒரு பினாமி மனு. இதன் உண்மையான நடிகா் அனில் தேஷ்முக் ஆவாா்.

டிஜிபி சஞ்சய் பாண்டே மாநிலத்தின் மூத்த காவல் துறை அதிகாரி என்பதால் அவரை தொந்தரவு செய்யவே சம்மன் அனுப்பியதாக மகாராஷ்டிர அரசு கூறிவதை ஏற்க முடியாது.

தேஷ்முக்கிற்கு எதிரான முறைகேடுகளையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த மும்பை முன்னாள் காவல் துறை ஆணையா் பரம்வீா் சிங்குடன் அவா் தொடா்பு கொண்டது தொடா்பான கேள்விகளுக்காகத் தான் பாண்டேவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பான சில ஆதாரங்களை தெளிவுபடுத்தவே சிபிஐக்கு பாண்டே தேவைப்படுகிறாா் என்றாா்.

இந்த விவாதத்தையடுத்து நவம்பா் 24ம் தேதிக்கு இந்த மனு விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாக அமா்வு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com