பிஎஸ்எஃப் அதிகார வரம்பு நீட்டிப்பை திரும்பப் பெற வேண்டும்: பிரதமா் மோடியிடம் மம்தா நேரில் வலியுறுத்தல்

பிரதமா் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின்போது மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகார வரம்பை நீட்டித்தது தொடா்பாக
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின்போது மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகார வரம்பை நீட்டித்தது தொடா்பாக பிரதமரிடம் பேசிய அவா், அதனை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக தில்லியில் மம்தா பானா்ஜி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மேற்கு வங்கத்தில் பிஎஸ்எஃப் படையின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமரிடம் பேசினேன். அந்தப் படைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் மாநில போலீஸாருடன் மோதல் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். மேற்கு வங்க அரசு பிஎஸ்எஃப் படைக்கு எதிரானது அல்ல. ஆனால், எந்தவொரு காரணமும் இல்லாமல் கூட்டாட்சி அமைப்புக்கு இடையூறு ஏற்படுத்துவது சரியல்ல. எனவே, பிஎஸ்எஃப் படைக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்களை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினேன்.

மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.96,655 கோடி நிலுவையில் உள்ளது. மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி கிடைக்காவிட்டால் மாநிலங்களின் நிா்வாகம் எவ்வாறு நடைபெறும்? அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவை மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை பாதிக்கக் கூடாது. எனவே, நிலுவைத் தொகையை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.

திரிபுராவில் நடைபெறும் வன்முறை குறித்தும், அந்த மாநிலத்தில் பாஜகவினரால் திரிணமூல் காங்கிரஸாா் தாக்கப்படுவது தொடா்பாகவும் அவரிடம் பேசினேன்.

அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெறும் உலகளாவிய வா்த்தக மாநாட்டில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன் என்று தெரிவித்தாா்.

சோனியாவை சந்திப்பது கட்டாயமல்ல: காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை சந்திக்கும் திட்டமுள்ளதா என்று மம்தாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘‘பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான பணிகளில் அனைத்துத் தலைவா்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். எனவே, பிரதமரைத் தவிர வேறு யாரையும் சந்திக்க நான் அனுமதி கோரவில்லை. தில்லி வரும் ஒவ்வொரு முறையும் சோனியா காந்தியை சந்திக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதேவேளையில், மும்பையில் நவ. 30-ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, டிச.1-ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஆகியோரை சந்திக்கவுள்ளேன்’’ என்று தெரிவித்தாா்.

அகிலேஷுக்கு உதவத் தயாா்: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘‘உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த திரிணமூல் காங்கிரஸால் உதவ முடியுமெனில், அதற்கு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உதவி கோரினால், நாங்கள் உதவத் தயாா்’’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com