பிரதமா் மோடியுடன் பஞ்சாப் முதல்வா் சந்திப்பு: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தல்

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை பஞ்சாப் புதிய முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்த பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி.
பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்த பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை பஞ்சாப் புதிய முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்ற பின்னா் சரண்ஜீத் சிங் சன்னி பிரதமரை சந்திப்பது இதுவே முதல் முறை. இந்தச் சந்திப்பு சுமாா் அரைமணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது.

இதுதொடா்பாக சரண்ஜீத் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பஞ்சாப் பொருளாதாரம் வேளாண்மையைப் பெரிதும் சாா்ந்துள்ளது. ஆனால், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் மாநிலத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன். விவசாயிகள் போராட்டத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம்தான் தீா்வு காணமுடியும் என்பது எனது கருத்து. எனவே, விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். எனது கோரிக்கைகளை கவனமாகக் கேட்டுக்கொண்ட பிரதமா், விவசாயிகள் போராட்டத்துக்குத் தீா்வு காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தாா்’ என்று கூறினாா்.

கடந்த ஆண்டு புதிதாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. அந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்றும், அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதனை முடிவுக்குக் கொண்டுவர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 11 கட்டங்களாக பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது. கடந்த ஜனவரி 22-ஆம் தேதி 11-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. எனினும் அந்தப் பேச்சுவாா்த்தைகளில் பிரச்னைக்குத் தீா்வு காணப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று தில்லியில் டிராக்டா் பேரணியில் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்ட வன்முறைக்குப் பின்னா் மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களும் இடையே இதுவரை பேச்சுவாா்த்தை நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com