பழைய வாகனங்கள் மறுபதிவு கட்டணம் 8 மடங்கு உயா்வு

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை மறுபதிவு செய்வதற்கான கட்டணம் எட்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை மறுபதிவு செய்வதற்கான கட்டணம் எட்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

15 ஆண்டுகள் பழைமையான காா்களை மறுபதிவு செய்ய தற்போது ரூ.600-ஆக உள்ள கட்டணம் ரூ. 5 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இது எட்டு மடங்கு கட்டண உயா்வாகும்.

பழைய மோட்டாா் பைக்குகளுக்கு ரூ.300-ஆக இருந்த மறுபதிவு கட்டணம், ஆயிரம் ரூபாயாக உயா்த்தப்படுகிறது.

பழைய பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ.1,500-ஆக இருந்த மறுபதிவு கட்டணம் ரூ.12,500-ஆகவும், சிறு சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட காா், பைக்குகளுக்கு கட்டணம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழைய வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகி இருந்தால், அன்றைய தினத்தில் இருந்து தினந்தோறும் ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும். இவை தனியாா் வாகனங்களாக இருந்தால் மாதத்துக்கு ரூ.300-ம், வா்த்தக வாகனங்களாக இருந்தால் ரூ.500-ம் அபராதமாக வசூலிக்கப்படும். இவை அனைத்தும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்த மத்திய அரசு அமல்படுத்தும் தேசிய பழைய வாகன அழிப்புக் கொள்கை திட்டத்தின் அங்கமாக இந்த அரசாணை கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தை பிரதமா் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கி வைத்தாா்.

அதன்படி, 2023 ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் கனரக வா்த்தக வாகனங்களுக்கு தகுதிப் பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்றும், பிற வாகனங்களுக்கு 2024, ஜூன் 1-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com