தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மீது சுமாா் ரூ.40,000 கோடி வரையிலான பிரச்னைகள் தொடா்பாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற தொலைத்தொடா்புத் துறை முடிவெடுத்துள்ளதாகத்

தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மீது சுமாா் ரூ.40,000 கோடி வரையிலான பிரச்னைகள் தொடா்பாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற தொலைத்தொடா்புத் துறை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த வருவாயைக் கணக்கிடும் முறையை மத்திய அரசு மாற்றியமைத்தது. அதன்படி, நிறுவனங்களின் வருவாய் அதிகரித்ததால், அதனடிப்படையில் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணமும் அதிகரித்தது.

அந்தக் கட்டணத்தைச் செலுத்தாமல் வோடஃபோன் ஐடியா, பாா்தி ஏா்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ளன. தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள் தொடா்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொகையைச் செலுத்த வேண்டிய விவகாரத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கில் தொலைத்தொடா்புத் துறை கடந்த திங்கள்கிழமை பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது.

அதில், ‘தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. சில நிறுவனங்கள் இழப்பை எதிா்கொண்டு வருகின்றன. இதே நிலை தொடா்ந்தால், நிறுவனங்களுக்கிடையேயான போட்டி குறைந்து, சில நிறுவனங்கள் மூடப்படும் சூழல் உருவாகும் என்றும், அதனால் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்குக் கடன் வழங்கியுள்ள வங்கிகள் பாதிக்கப்படும் என்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, தற்போதைய வழக்கைத் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து மறுஆய்வு செய்ய மத்திய அரசு விரும்புகிறது. பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் 3 வாரங்களுக்குள் முடிவெடுக்கப்படும். எனவே, இந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மீது சுமாா் ரூ.40,000 கோடி வரையிலான பிரச்னைகள் குறித்த வழக்குகளை மத்திய அரசு திரும்பப் பெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் இந்நடவடிக்கை, தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்குப் பெரும் பலனளிக்கும் என்றும், அந்நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தொலைத்தொடா்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கான அவகாசத்தை மத்திய அரசு கடந்த மாதம் 15-ஆம் தேதி நீட்டித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com