நகா்ப்புற நடுத்தரப் பிரிவினரின் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை: பிரதமர் மோடி

லக்னெளவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘புதிய நகா்ப்புற இந்தியா’ கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி.
pti10_05_2021_000115b092819
pti10_05_2021_000115b092819

 உத்தர பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 75,000 வீடுகளைப் பயனாளிகளிடம் ஒப்படைத்த பிரதமர் நரேந்திர மோடி, நகர்ப்புற நடுத்தரப் பிரிவினர் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
 மாநிலத்தில் ஆட்சி செய்த முந்தைய சமாஜவாதி அரசு ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித் தருவதில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
 "புதிய நகர்ப்புற இந்தியா' என்ற கருத்தரங்கை பிரதமர் மோடி லக்னெளவில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். அப்போது, உத்தர பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 75,000 வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் அவர் ஒப்படைத்தார்.
 பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 75 நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
 நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் முன்பைவிட அதிக எண்ணிக்கையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அத்திட்டத்தின் கீழ் 1.13 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 50 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
 வலுவான வீடுகள் இல்லாமல் குடிசைப் பகுதிகளில் வசித்த சுமார் 3 கோடி நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள், வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் லட்சாதிபதிகளாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
 பெரும்பாலான குடும்பங்களில் சொத்துகள் ஆண்கள் பெயரிலேயே இருக்கின்றன. இந்நிலைமையை மாற்றும் நோக்கில், வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 80 சதவீதத்துக்கும் அதிகமான வீடுகள் பெண்கள் பெயரிலோ அல்லது கணவன்-மனைவி இருவரையும் உரிமையாளர்களாகக் கொண்டோ பதிவு செய்யப்பட்டுள்ளன.
 திட்டத்தில் துரிதநிலை: மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்த கட்சிகள், திட்டங்களை அமல்படுத்துவதில் காலம் தாழ்த்தின. அவர்களது ஆட்சியின்போது வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 18,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், 18 வீடுகள்கூட கட்டப்படவில்லை.
 முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன், 9 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் நகர்ப்புற ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. 14 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்த வீடுகளில் பல நவீன வசதிகள் உள்ளன.
 அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையின்போது அயோத்தி நகரில் 7.5 லட்சம் விளக்குகளை ஏற்ற மாநில அரசு முடிவெடுத்துள்ளது. வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பலனடைந்தவர்களின் வீடுகளிலும் இரு விளக்குகள் ஏற்றப்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
 எல்இடி மூலம் சேமிப்பு: நகர்ப்புற நடுத்தரப் பிரிவினர் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை இயற்றியது அதில் முக்கியமான நடவடிக்கை. இந்தச் சட்டம், வீட்டுவசதித் துறையை அவநம்பிக்கை மற்றும் மோசடியிலிருந்து காப்பாற்றியது.
 எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகள், ஒவ்வோர் ஆண்டும் சுமார் ரூ.1,000 கோடியை சேமிக்கின்றன. அவ்வாறு சேமிக்கப்படும் தொகை, இதர வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நகரங்களில் வசிக்கும் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் எல்இடி விளக்குகள் வெகுவாகக் குறைத்துள்ளன.
 தொழில்நுட்ப வசதிகள்: நகர்ப்புறங்களில் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக கடந்த 6-7 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 70-க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் தொழில்நுட்பங்களின் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றன.
 சாலையோர வியாபாரிகள் பலன்: பிரதமரின் ஸ்வநிதி திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.2,500 கோடிக்கும் அதிகமாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
 நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டில் 250 கி.மீ. தொலைவுக்கு குறைவான வழித்தடங்களில் மெட்ரோ சேவைகள் வழங்கப்பட்டன. தற்போது 750 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மேலும் 1,000 கி.மீ.-க்கு அதிகமாக மெட்ரோ ரயில் வழித்தடப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் பிரதமர் மோடி.
 பேருந்துகள் தொடக்கிவைப்பு: லக்னெள, கான்பூர், வாராணசி, பிரயாக்ராஜ், கோரக்பூர், ஜான்சி, காஜியாபாத் ஆகிய இடங்களுக்கு மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் (ஃபேம்) திட்டத்தின் கீழ் 75 பேருந்துகளை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
 இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஹர்தீப் சிங் புரி, மகேந்திரநாத் பாண்டே, கெளஷல் கிஷோர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com