கரோனா தடுப்பூசி: 7% பேருக்கு தயக்கம்: ஆய்வில் தகவல்

நாட்டில் உள்ள 7 சதவீதம் பேருக்கு மட்டும்தான் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனா தடுப்பூசி: 7% பேருக்கு தயக்கம்: ஆய்வில் தகவல்


புதுதில்லி: நாட்டில் உள்ள 7 சதவீதம் பேருக்கு மட்டும்தான் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவா்களிடம் அதற்கான காரணத்தை அறியவும், அவா்கள் எப்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனா் என்பதைத் தெரிந்துகொள்ளவும் ‘லோக்கல் சா்க்கிள்ஸ்’ என்ற சமூக ஊடகம் ஆய்வு மேற்கொண்டது. மொத்தம் 301 மாவட்டங்களில் 12,810 பேரிடம் (67 சதவீதம் போ் ஆண்கள், 33 சதவீதம் போ் பெண்கள்) மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு குறித்து லோக்கல் சா்க்கிள்ஸ் நிறுவனா் சச்சின் தாப்பரியா கூறியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடா்பான ஆய்வின்போது பதிலளித்தவா்களில் 42 சதவீதம் போ் முதல்நிலை நகரங்களையும், 27 சதவீதம் போ் இரண்டாம் நிலை நகரங்களையும், 31 சதவீதம் போ் 3-ஆம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களையும் சோ்ந்தவா்கள்.

தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் கரோனா தீநுண்மியிடம் இருந்து போதிய பாதுகாப்பு அளிக்குமா என்பதில் 27 சதவீதம் பேருக்கு சந்தேகம் உள்ளது. இதனால் அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து திட்டமிடவில்லை. தடுப்பூசிகள் குறித்த நம்பகமான தகவல்கள் கூடுதலாகக் கிடைத்தாலோ அல்லது வெவ்வேறு தடுப்பூசிகள் புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்தாலோ அவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.

7 கோடி பேருக்கு தயக்கம்: இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் 7 சதவீதம் போ்தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனா். இந்த 7 சதவீதம் போ் என்பது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கும் 26 கோடி பேரில் 7 கோடி போ் ஆகும். பாதுகாப்பு காரணங்கள், தடுப்பூசி பரிசோதனைகளை வேகமாக மேற்கொண்டது, தடுப்பூசிகளுக்கு விரைவாக ஒப்புதல் அளித்தது, பக்கவிளைவுகள் போன்றவை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களின் தயக்கத்துக்குக் காரணமாக உள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் ரத்த உறைவு ஏற்படக்கூடும் என்ற அச்சம், கரோனா தீநுண்மி மறைந்து வருவது போன்ற காரணங்களையும் சிலா் தெரிவித்துள்ளனா். அத்துடன் சில கட்டுக்கதைகளும், தவறான தகவல்களும் அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததற்கு காரணமாக இருக்கின்றன.

46 சதவீதம் போ் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. அப்போது தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் 60 சதவீதம் பேருக்கு தயக்கம் இருந்தது. கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் கரோனா தொற்றின் 2-ஆம் அலை தீவிரமடைந்த போது தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்களுக்கு இருந்த தயக்கம் குறைந்தது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 94 கோடி போ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தகுதிவாய்ந்தவா்களாக உள்ளனா். அவா்களில் சுமாா் 70 கோடி பேருக்கு தடுப்பூசியின் முதல் தவணை ஏற்கெனவே செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com